மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு
சாரல் மழை பெய்து வருவதால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோம்பைத்தொழு அருகே 'சின்னச்சுருளி' என்று அழைக்கப்படுகிற மேகமலை அருவி அமைந்துள்ளது. போதிய மழை பெய்யாததால் கடந்த 2 மாதங்களாக அருவி வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, நேற்று காலை மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதேநேரத்தில், சுற்றுலா பயணிகள் இன்றி அருவி வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில், அங்கு குளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மேகமலை அருவியில் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.