ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

Update: 2022-08-03 17:56 GMT

மன்னார்குடி

பெரியகுடி எரிவாயு எண்ணெய் கிணற்றை மூடுவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடி கிராமத்தில் உள்ள எரிவாயு எண்ணெய் கிணறு பிரச்சினை குறித்து விவசாயிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் கீர்த்தனா மணி தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க மாநில துணைத்தலைவர் முகமது ரபீக், ஓ.என்.ஜி.சி. தலைமை பொது மேலாளர் (பொறியியல்) சிவசங்கரன், தாசில்தார் ஜீவானந்தம், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பெரியகுடி எரிவாயு எண்ணெய் கிணற்றின் கசிவுகளை எப்போது சரி செய்தீர்கள்? எண்ணெய் கிணற்றிலிருந்து கொண்டுவரப்படும் குழாய்களை துண்டிப்பது எப்போது? கிணற்றை மூடும் தேதியை அறிவிக்க வேண்டும். விவசாய நிலங்களின் அடியில் செல்லும் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும். எண்ணெய் குழாய் செல்லும் விவசாய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கும் தேதியை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

வெளிநடப்பு

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து பின்னர் தேதி அறிவிக்கப்படும் என ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்