3 இடங்களில் செயல்பட தொடங்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட தொடங்கின.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சியில் 1-வது வார்டு பள்ளிவாசல் பகுதி, 2-வது வார்டு செட்டியார் தெரு, 15-வது வார்டு கே.செவல்பட்டி, காளியம்மன் கோவில்தெரு பகுதியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்தது. இதனால் காரியாபட்டி பேரூராட்சி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உடனடியாக 3 சுத்திகரிப்பு நிலையங்களையும் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் லியாகத் அலி, செல்வராஜ், முனீஸ்வரி இனியவன், சங்கரேஸ்வரன், முகமது முஸ்தபா, தீபா பாண்டியராஜன், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.