சென்னை-நெல்லை இடையே ஆகஸ்டு இறுதியில் வந்தே பாரத் ரெயில் இயக்க முடிவு

சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் அடுத்த மாதம் இறுதியில் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-07-26 21:38 GMT

சென்னை,

இந்தியாவில் வந்தே பாரத் ரெயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் உள்ளிட்ட அம்சங்களால் இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு வழித்தடங்களில் 23 ரெயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

அதில், சென்னையில் இருந்து சென்னை-கோவை, சென்னை மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க ரெயில்வே திட்டமிட்டது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்தது. அதன்படி, அடுத்த மாதம் இறுதியில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

படுக்கை வசதி இல்லை

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால், முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டுப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரெயிலில் முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. பயணிகளின் வரவேற்பைப்பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்தடைய 10 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரெயில் 8 மணி நேரத்திற்குள் வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதனால், 2 மணிநேரம் மிச்சமாகும்.

இதேபோல, படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது. எனவே, சென்னை-நெல்லை வழித்தடத்தில் 8 பெட்டிகளிலும் இருக்கைகள் உட்கார்ந்து செல்லும் வகையிலேயே அமைக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்