கடலூர் மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிப்பு

கடலூர் மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Update: 2022-11-19 18:45 GMT

கடலூர் முதுநகர், 

சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைதாகி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்து களையும் தெரிவிக்கக்கூடாது என்றும், அவருக்கான ஜாமீன் நிபந்தனைகளை ஐகோர்ட்டு பதிவாளர் விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து தனக்கு உரிய ஜாமீன் நிபந்தனைகளை விதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு பதிவாளரிடம் சவுக்குசங்கர் மனு தாக்கல் செய்தார்.

ஜாமீனில் விடுவிப்பு

அந்த மனுவை மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் வெங்கடவரதன் (நீதித்துறை) நேற்று விசாரித்தார். பின்னர் பதிவாளர் விதித்த நிபந்தனைகள் வருமாறு:-

* சவுக்கு சங்கர் தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

* சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிட கூடாது.

* கோர்ட்டு உத்தரவிட்டால் உடனடியாக மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும்.

* நீதித்துறைக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே சவுக்கு சங்கர் நேற்று காலை 9.30 மணி அளவில் கடலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்