வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் பேட்டி

வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி ெசயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2023-04-04 18:45 GMT

சிவகங்கை

வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி ெசயலாளர் முத்தரசன் கூறினார்.

இழப்பீடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் தேவைதான். வன விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு அவைகளை தடுத்து நிறுத்த வேண்டும். காட்டு பன்றிகளை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்.

அரசு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசின் பொது நிகழ்வுகளுக்கும், விரிவாக்க பணிகளுக்கும் விவசாயிகளிடம் நிலத்தை விலைக்கு வாங்குகிறார்கள். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிலத்தின் சந்தை மதிப்பை விட ஐந்து மடங்கு கூடுதலாக வழங்க வேண்டும். அத்துடன் நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தர வேண்டும்.

வைகை-குண்டாறு திட்டம்

ஆவின் பால் விலை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் அல்லது மானிய விலையில் விவசாயிகளுக்கு தீவனங்களை வழங்க வேண்டும். வைகை-குண்டாறு திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும். சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக காணொலி மூலமாக முதல்-அமைச்சர் கூட்டம் நடத்தியது வரவேற்கத்தக்கது.

இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும்தான் முறையாக முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் பேசியுள்ளார். அதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்.

பழிவாங்கும் நோக்கம்

நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்தது தவறானது. இந்த செயல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்பதுதான். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றும் பேசுகிறார். எனவே அவரது கருத்துக்களுக்கு பதில் அளிக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விவசாயிகள் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், மாநில துணை தலைவர் லகுமையா, மாநில இணை செயலாளர் துளசிமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவபுண்ணியம், உலகநாதன், சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கண்ணகி, நகர் செயலாளர மருது ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்