கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி-கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-08-31 19:00 GMT


கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மாரத்தான் போட்டி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மூலம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான மாரத்தான் போட்டியில் 162 பேர் கலந்து கொண்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து சூவக்கரை அருகில் உள்ள தனியார் நூற்புமில் வரை சென்று மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு திரும்பி 6 கிலோமீட்டர் தூரத்தை கடந்தனர். கல்லூரி மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியில் 115 மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து சூலக்கரை வரை சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு திரும்பி 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தனர்.

பரிசு

மாணவர்கள் பிரிவில் காக்கிவாடன்பட்டி கே.ஆர்.பி. கல்லூரி மாணவர் ஜோதிமுருகன், சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மருதுபாண்டி, அய்யனார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர் விக்னேஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். மாணவிகள் பிரிவில் விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி மாணவிகள் அமிர்தவல்லி மற்றும் கனக லட்சுமி ஆகியோர் முதல் 2 இடங்களையும், சிவகாசி அரசு கலைக் கல்லூரி மாணவி பத்மலட்சுமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மேலும் மாணவர்கள் பிரிவில் 4 ஆறுதல் பரிசுகளும், மாணவிகள் பிரிவில் 3 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்