'நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்றும் தொடரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

Update: 2023-05-11 09:33 GMT

சென்னை,

தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. மின்சாரக் கார் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 2.50 லட்சம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

முன்பு தொழில்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மற்றும் தொழில்துறை அதிகாரிகள், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று முன்னனி தொழில்துறையினரை சந்தித்து முதலீடுகளை ஈர்த்துள்ளனர்.

இன்றைய தினம் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஏர்.பி.ராஜா, மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களுடைய இலாகாக்கள் மாறினாலும், தமிழ்நாடு அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்