ேமாட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல்

மதுரையில் ேமாட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து அவரை ஓட ஓட விரட்டி கொன்றனர். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-14 18:45 GMT

மதுரையில் ேமாட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து அவரை ஓட ஓட விரட்டி கொன்றனர். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வாலிபர்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் விஜயராஜன். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 22). பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் தெற்குவாசல் பகுதியில் உள்ள மீனாட்சி தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல், ஆனந்தகுமாரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு, அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார்.

ஓட ஓட விரட்டி...

ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஆனந்தகுமாரை ஆயுதங்களுடன் துரத்தி சென்று நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டது ஏன்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மதுரை சித்திரை திருவிழாவின் போது ஆனந்தகுமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் அவர்களுக்குள் கடுமையான மோதல் நடந்ததும் தெரியவந்தது. இந்த முன் விரோத தாக்குதலில் ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் அவரது நண்பர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் பட்டப்பகலில் வாலிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்