சேலத்தில் நாளை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடைபயணம்

மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-01-02 05:22 GMT

சேலம்,

`என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளை (3-ந் தேதி ) முதல் 4 நாட்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். அதன்படி நாளை (3-ந் தேதி) காலை 11 மணியளவில் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பேளூரில் நடைபயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். மாலை 3 மணிக்கு ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் டவுன் பகுதியிலும், மாலை 6 மணிக்கு கெங்கவல்லி தொகுதியில் தம்மம்பட்டியிலும் நடைபயணம் செல்கிறார்.

நாளை மறுநாள் (4-ந் தேதி) காலை 11 மணிக்கு ஓமலூர் தொகுதிக்குட்பட்ட ஓமலூரிலும், மதியம் 3 மணிக்கு வீர பாண்டி தொகுதி இளம்பிள்ளையிலும், மாலை 6 மணிக்கு எடப்பாடி பொதுக்கூட்டத்திலும் அண்ணாமலை பேசுகிறார்.

5-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாநகரில் நடைபயணம் தொடங்குகிறது. இதில் மாநகர தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட சேலம் 5 ரோடு முதல் மெய்யனூர் சாலை வரை மதியம் 2 மணி வரைக்கும், செவ்வாய்ப்பேட்டை முக்கோணம் முதல் அரசு ஆஸ்பத்திரி வரை மாலை 5 மணிக்கும், தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குகை முதல் தாதகாப்பட்டி வரை இரவு 7 மணிக்கும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.

8-ந் தேதி காலை 11 மணிக்கு மேட்டூர் தொகுதி மேச்சேரியில் அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். மேலும் சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (3-ந் தேதி) காலை 9 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்