அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
முகப்பேர் ஸ்ரீ சந்தானசீனிவாச பெருமாள் அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
அறக்கட்டளை
சென்னை முகப்பேரில் உள்ள சந்தானசீனிவாச பெருமாள் கோவிலை ஸ்ரீ சந்தானசீனிவாச பெருமாள் பொது அறக்கட்டளை நிர்வகித்து வந்தது. இந்த அறக்கட்டளை கோவிலை நிர்வகிப்பதால், அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவித்து, அதற்கு தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
நிதி முறைகேடு
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அறநிலையத்துறை வக்கீல், 'இந்த கோவிலுக்கு 9 மாதங்களில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. ஆனால், வெறும் 43 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவில் வருமானம் அறக்கட்டளையின் பெயரில் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் காரணமாகவே அறக்கட்டளை மதநிறுவனமாக அறிவிக்கப்பட்டு, தக்கார் நியமிக்கப்பட்டார். இவ்வாறு உத்தரவிட அறநிலையத்துறை உதவி ஆணையருக்கும் அதிகாரம் உள்ளது' என்று வாதிட்டார்.
ரத்து
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சட்டப்படி ஒரு அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது. உதவி ஆணையருக்கு அதிகாரம் இல்லை. எனவே, அறக்கட்டளையை மதநிறுவனமாக அறிவித்த உதவி ஆணையரின் உத்தரவை ரத்துசெய்கிறேன். மனுதாரரின் அறக்கட்டளை மதநிறுவனமா இல்லையா என விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தி 4 மாதங்களில் அறநிலையத்துறை இணை ஆணையர் முடிவு எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.