சிவகாசி
விருதுநகர் மாவட்ட அளவில் பாட்டு பரதநாட்டியம் நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகியவற்றில் 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்கு போட்டிகள் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்மில் செயல்பட்டு வரும் ஜவகர் சிறுமன்றத்தின் வாயிலாக இந்த போட்டிகள் சிவகாசி அண்ணாமலையம்மாள் உண்ணாமலை நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படுகிறது. பரதநாட்டியம், குச்சிப்படி மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவிய போட்டிக்கு பென்சில் கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்முன் அறிவிக்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்கின்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களது வயது சான்றிதழுடன் போட்டி நடக்கும் பள்ளிக்கு காலை 9 மணிக்கு வர வேண்டு்ம என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.