மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
விஜயகாந்தின் அன்பிற்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;
"விஜயகாந்தின் மறைவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கேப்டன் என்பது விஜயகாந்துக்கு மிகவும் பொருத்தமான பெயர். நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அவரது நட்பு, அன்பு என்றுமே அளவிட முடியாதது. சுயநலமில்லாத மனிதர். விஜயகாந்தின் அன்பிற்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள். விஜயகாந்துடன் ஒருமுறை பழகிவிட்டால் அவரை எப்போதும் மறக்கவே முடியாது. அனைவர் மீதும் கோபப்படுவார். ஆனால் நியாயமான காரணங்களுக்காகவே கோபப்படுவார்." என்று கூறினார்
மேலும்," வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனங்களில் நின்றவர் யார்" என்ற பாடலை ரஜினிகாந்த் மேற்கோள் காட்டினார்.