தமிழகம் முழுவதும் அருங்காட்சியகங்களை மேம்படுத்த நடவடிக்கை-அரசு முதன்மை செயலாளர் பேட்டி

தமிழகம் முழுவதும் அருங்காட்சியகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மை செயலாளா் மணிவாசன் தெரிவித்தார்.

Update: 2023-09-22 19:29 GMT

புராதன சின்னங்கள்

புதுக்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், கற்சிலைகள், சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டையில் சங்க காலம் முதலான வரலாற்று புராதன சின்னங்கள் உள்ளன. புதுக்கோட்டை நகரமும் தொன்மையானது. இங்கு அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அரசு அருங்காட்சியகம் சாலையோரம் அமைந்துள்ளது. புதிதாக அரசு அருங்காட்சியகம் கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்தால் வருங்காலத்தில் கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அருங்காட்சியகங்களை மேம்படுத்த...

இந்த அரசு அருங்காட்சியகம் முக்கியமானதாகும். இதனை விரிவுபடுத்த முடியாது. வாகனம் நிறுத்தக்கூட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் புதிதாக அரசு அருங்காட்சியகம் கட்ட நிலம் தேர்வு செய்து கொடுத்தால் கட்ட முடியும். அருங்காட்சியகங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் அருங்காட்சியகங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த கால தொன்மையான வரலாறுகளை பாதுகாக்கவும், வருங்கால சந்ததியினருக்கு தெரிய வைப்பதும் அருங்காட்சியகத்தின் முக்கிய பணியாகும். தமிழகம் முழுவதும் அருங்காட்சியகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுற்றுலா தலங்கள்

சுற்றுலாத்துறையில் தமிழகம் முன்னணியான மாநிலமாக உள்ளது. உள்ளூர், வெளிநாடு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகம் முழுவதும் 300 இடங்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை திட்டம் தயாரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் அவர் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை பார்வையிட்டார். அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்கள் குறித்து அகழாய்வு இயக்குனர் தங்கதுரை எடுத்துக்கூறினார். முன்னதாக அருங்காட்சியக ஆய்வின் போது கலெக்டர் மெர்சி ரம்யா, அருங்காட்சியக காப்பாட்சியர் (கூடுதல் பொறுப்பு) பக்கிரிசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்