வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை; மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

வந்தே பாரத் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

Update: 2023-09-24 19:49 GMT

கூடுதல் நிறுத்தங்கள்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் 9 வந்தே பாரத் ரெயில்களை நேற்று தொடங்கி வைத்தார். இதில் முக்கியமானது, தென்தமிழகத்துக்கு பயனளிக்கும் வகையில் உள்ள நெல்லை-சென்னை வழித்தட ரெயிலாகும். சுமார் 8 மணி நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னை சென்றடையும் வகையில் இந்த ரெயில் நவீன வசதிகளுடன் இயக்கப்படுகிறது. அதிவேகமாக சென்னை செல்ல இந்த ரெயில் ஏதுவாக இருக்கும்.

இதற்காக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த ரெயில் 160 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்பட வாய்ப்புள்ளது. மக்களின் கோரிக்கைகளை ஏற்று கூடுதல் நிறுத்தங்களை ஏற்படுத்த பரிசீலிக்கப்படும்.

பல்வேறு திட்டங்கள்

தற்போது வந்தே பாரத் ரெயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில், ரெயில் பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படாது.பிரதமரும், ரெயில்வே மந்திரியும் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.800 கோடி மட்டுமே. ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு நடப்பு நிதியாண்டில் மட்டும் ரெயில்வே திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் 9 புதிய ரெயில் வழித்தடங்கள், நடப்பாண்டு பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.இதைத்தவிர அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.800 கோடியில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையமும், காட்பாடி, சேலம், கோவை, ராமேசுவரம், மதுரை, புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 75 ரெயில் நிலையங்களும் உலகத்தரமான ரெயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன. மேட்டுப்பாளையம்-ஊட்டி ரெயில் புராதன தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரெயில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மத்திய இணை மந்திரி எல்.முருகன், தங்க கொடிமரம் முன்பு அமர்ந்து சிறிது நேரம் வணங்கினார். பின்னர் மூலஸ்தான அம்மனை பய பக்தியுடன் வழிபட்ட அவர், கோவிலை வலம் வந்து தங்க கோபுரத்தை வணங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மாரியம்மன் படம் மற்றும் பிரசாதத்தை இணை ஆணையர் கல்யாணி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்