குழாய் உடைந்ததால் பாமாயில் வீணாக வெளியேறியது: சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது

சென்ைன காசிமேடு அருகே குழாய் உடைந்ததால் பாமாயில் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

Update: 2022-09-27 23:17 GMT

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் பாமாயில், ராட்சத குழாய் மூலம் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் ராயபுரம், காசிமேடு வழியாக செல்கின்றன.

நேற்று முன்தினம் இரவு காசிமேடு சூரியநாராயணன் தெரு, நாகூரான் தோட்டம் பகுதியில் விசைப்படகு கட்டும் இடம் அருகே பூமிக்கு அடியில் சென்ற ராட்சத குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதில் சென்ற பாமாயில் குரூடு எண்ணெய் வெளியேறி தரையின் மேல் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் அதிக அளவில் குரூடு எண்ணெய் வெளியேறி தரையில் குளம்போல் தேங்கியது.

வாளி மூலம் அள்ளினர்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஊழியர்கள், தரையில் வீணாக வெளியேறிய பாமாயில் குரூடு எண்ணெயை மோட்டார் மூலம் லாரியில் உறிஞ்சி எடுத்தனர். மேலும் வாளிகள் மூலமும் அள்ளினர்.

எனினும் குழாய் உடைப்பால் தொடர்ந்து பாமாயில் குரூடு எண்ணெய் அதிக அளவில் வெளியேறியபடி இருந்தது. இதையடுத்து கூடுதல் லாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டன. அப்பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு குரூடு எண்ணெய் தரையில் பரவி காணப்பட்டது.

குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில் கடல் பகுதி உள்ளது. பூமிக்கடியில் இருந்து வெளியேறிய பாமாயில் தேங்கி கிடந்த மழைநீரில் கலந்தது. அது கடல் தண்ணீரில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பாமாயில் வீணானது

சுமார் 1 டன் பாமாயில் கச்சா எண்ணெய் வீணாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் தரையில் வெளியேறிய பாமாயில் எண்ணெயை எடுக்க வந்த லாரியை அங்கிருந்த மீனவர்கள் திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வந்த அதிகாரிகளால் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சரி செய்யும் பணி

இதுதொடர்பாக தனியார் ஆயில் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சித்தார்த் கூறியதாவது:-

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய், திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து லாரிகள் மூலமாக கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாக்கெட்டு மூலம் சென்னை மற்றும் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

துறைமுகம் முதல் திருச்சினாங்குப்பம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 ராட்சத குழாய் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. நேற்று மாலை ஒரு குழாயில் ஏற்பட்ட விரிசல் மூலம் 1 டன் பாமாயில் குரூடு எண்ணெய் வெளியேறி உள்ளது. உடனடியாக விரிசல் ஏற்பட்ட குழாயில் எண்ணெய் செல்வதை துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர். மற்றொரு குழாய் மூலம் வழக்கம் போல எண்ணை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்