பிளஸ்-2 தேர்வில் 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வில் 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

Update: 2023-05-08 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 5,912 பேரும், மாணவிகள் 7,172 பேரும் தேர்வு எழுதினர். மாணவ-மாணவிகள் எழுதிய விடைதாள்கள் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 27-ந் தேதி வரை நடந்தது. அதனை தொடர்ந்து பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ந் தேதி வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7-ந் தேதி நடந்ததால் பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 84 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 234 பேரும், மாணவிகள் 6 ஆயிரத்து 732 என மொத்தம் 11 ஆயிரத்து 966 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.46. அதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.53 சதவீதமும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.87 சதவீதமும் ஆகும். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 61 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி விகிதம் 95.8 சதவீதம் ஆகும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 9 குழந்தைகள் காப்பகங்களில் 5 குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 20 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 4 மாணவர்களும், 15 மாணவிகளும் என மொத்தம் 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 124 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதில் திருவாரூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பாளைக்கோட்டை, ராதாநரசிம்மபுரம், ஆலங்கோட்டை, மகாதேவபட்டினம், திருமக்கோட்டை, பைங்காடு, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்