மூதாட்டி உள்பட 3 போலி டாக்டர்கள் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் டிப்ளமோ, ஓமியோபதி முடித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த மூதாட்டி உள்பட 3 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-18 19:02 GMT

மூதாட்டி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, வாணியம்பாடி அரசு மருத்துவமனை டாக்டர் செந்தில் தலைமையில் மருத்துவ குழுவினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் ஆலங்காயம் காந்திரோடு பகுதியில் உள்ள கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தனபால் (83) என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தி வருவதை கண்டறிந்தனர். இதனைடுத்து தனபாலை பிடித்து ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தனபாலை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட தனபால் என்பவர் கடந்த 50 ஆண்டு காலமாக இதே பகுதியில் போலி மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி அருகே உள்ள கோனேரி குப்பம் பகுதியில் டிப்ளமோ முடித்துவிட்டு அனுபவ அடிப்படையில் மூதாட்டி ஒருவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரசு மருத்துவர் யோகானந்தம் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் சென்று வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த மூதாட்டியை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மனோரஞ்சிதம் (வயது 67) என்பதும், டிப்ளமோ முடித்துவிட்டு அனுபவ அடிப்படையில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்திருந்த மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை பறிமுதல் செய்து, அவரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மனோரஞ்சிதத்தை போலீசார் கைது செய்து வயது முதிர்வு காரணமாக அவரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வாலிபர் கைது

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில் அம்பலூர் புது தெருவை சேர்ந்த நடராஜன் மகன் அருண்குமார் (28) என்பவர் டிப்ளமோ படித்து விட்டு ஆங்கில சிகிச்சை அளித்து வந்தார். அவரை திருப்பத்தூர் அரசு உதவி மருத்துவ அலுவலர் நதிம் மற்றும் சுகாதாரத்துறையினர் பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்