ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2¾ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் அபேஸ்

திருவட்டார் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2¾ பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-15 20:13 GMT

திருவட்டார், 

திருவட்டார் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2¾ பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ்சில் புறப்பட்டார்

அருமனை அருகே உள்ள சிதறாலை சேர்ந்தவர் வசந்தா (வயது56). இவருடைய மகன் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் மங்களாநடையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இங்கு அடகு வைக்கும் நகைகளை பாதுகாப்பு கருதி வீட்டில் வைத்திருப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலையில் வசந்தா வீட்டில் இருந்த அடகு நகைகளை எடுத்து கொண்டு மார்த்தாண்டம் சென்று விட்டு மீண்டும் மங்களாநடையில் உள்ள நிதி நிறுவனத்துக்கு அரசு பஸ்சில் வந்தார்.

அவர் நிதி நிறுவனத்தில் வந்தபோது அவரது தோள்பை பாதி திறந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பையின் உள்ளே பார்த்த போது அதில் இருந்த 2¾ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் பஸ்சில் வைத்து திருடியதாக தெரிகிறது.

போலீசார் சோதனை

உடனே, வசந்தா தனது மகனுடன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார். அத்துடன் தான் வந்த பஸ்சின் அடையாளங்களை எடுத்து கூறினார்.

சிறிது நேரத்தில் அந்த பஸ் திருவட்டார் போலீஸ் நிலையம் முன்பு வந்த போது சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும், பயணிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால், நகை, பணம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்