தேனீக்கள் கொட்டி 12 மாணவர்கள் காயம்

தியாகதுருகம் மலையில் தேனீக்கள் கொட்டி 12 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2023-09-03 18:45 GMT

தியாகதுருகம்

ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவனின் அக்காளுக்கு தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மாணவனின் நண்பர்களான அரியந்தக்கா, சீதேவி, பாசார் ஆகிய கிராமங்களை சேர்ந்த 12 மாணவர்கள் பீளமேடு கிராமத்துக்கு வந்தனர். திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து தியாகதுருகம் மலையை சுற்றி பார்க்க சென்றனர். மலையை சுற்றிப் பார்த்துவிட்டு மாணவர்கள் அனைவரும் மீண்டும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது வழியில் மலையில் இருந்த தேன் கூட்டின் மீது சில மாணவர்கள் கல் வீசினர். இதனால் கலைந்த தேனீக்கள் மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதனால் வலி தாங்க முடியாமல் மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த மாணவர்கள் ராஜாராமன், கஜேந்திரன், ரங்கன், ஜீவா, சுதீஷ், விஸ்வநாதன், கவியரசு, ஸ்ரீராம், சதீஷ், செந்தில், சிவமணி அருண்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தேனீகள் கொட்டி மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்