உலக அகதிகள் தினம்
அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, ‘உலக அகதிகள் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.;
உலக நாடுகள் தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், போர். இரு நாடுகளுக்குள் நடக்கும் போராக இருந்தாலும் சரி, உள்நாட்டுப் போராக இருந்தாலும் சரி, அவற்றால் ஏற்படும் பொருளாதார இழப்பை என்றாவது ஒருநாள் சரிசெய்து விடலாம்.
ஆனால் ஒரு நாட்டின் மக்கள், அந்த இடத்தில் வாழ முடியாத சூழ்நிலையில் இன்னொரு நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதுதான் போர்களை நாம் தவிர்க்க வேண்டியதற்கான முக்கியமான காரணமாக பார்க்க வேண்டும். இலங்கை மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் போது அகதிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்றும் கூட உக்ரைன் மீது ரஷியா தொடுத்திருக்கும் போரால், சொந்த நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் உக்ரைன் மக்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதுபோன்ற நிலையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, 2000-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சிறப்பு தீர்மானம் இயற்றப்பட்டது. அதன்படி அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக, 'உலக அகதிகள் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க அகதிகள் தினம் ஜூன் 20-ல் அனுஷ்டிக்கப்படுவதால், அதையே உலக அகதிகள் நாளாக அறிவித்திருக்கிறார்கள்.
பல்வேறு போர்களால், அரசியல் மற்றும் சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லல் படுபவர்களை நினைவுகூரும் வகையில், ஜூன் 20-ந் தேதி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகள் போன்றவை உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான கருப்பொருளை, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தீர்மானிக்கிறது.