தமிழ்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு... கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழக புவி அமைப்பியல் தலைவர்

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படாத பாதுகாப்பான பகுதி என்று எதையும் கூற முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Update: 2023-02-14 11:12 GMT

சென்னை,

பூமிக்கு அடியில் கொதிக்கும் பாறை குழம்புக்கு மத்தியில் மிதக்கும் மேல் பகுதி கண்ட தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால், நிலநடுக்கம் ஏற்படுகிறது. சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் உலக நாடுகளை நடுங்கச்செய்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இந்திய தட்டு வடகிழக்கு நோக்கி நகர்வதாகவும், அது திபெத்திய தட்டில் மோதும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்கிறார் அண்ணா பல்கலைக்கழக புவி அமைப்பியல் தலைவர் பேராசிரியர் இளங்கோ. 

இந்தியாவை பொறுத்தவரை குஜராத், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், பீகார், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகள் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அதிக பாதிப்புள்ள பகுதிகளாக அறியப்பட்டு உள்ளன. இவை பிரிவு 5-ல் அமைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சற்று பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. ஆம்.. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைவான வாய்ப்பு கொண்ட பிரிவு 2-ல் இருந்தாலும், சென்னையானது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு கொண்ட பகுதியில் பிரிவு 3-ல் இடம்பெற்றுள்ளது. இதனையும் இளங்கோ சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படாத பாதுகாப்பான பகுதி என எதையும் கூற முடியாது என்று சொல்லும் அவர், அதற்கான விளக்கத்தையும் எடுத்துரைத்தார். அதாவது ஒட்டுமொத்த இந்திய தட்டும் ஒரே இடத்தை நோக்கி நகராமல், அங்கங்கே சில வெடிப்புகள் ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார்.

இதற்கிடையே சிறிய அளவிலான நிலநடுக்கங்களால் சீற்றம் எடுக்கும் பாறைக்குழம்பு அவ்வபோது வெளியேறிவிடுவதால், இந்தியாவில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பது வல்லுநர்களின் கூற்றாக இருக்கிறது.

சற்று பாதுகாப்பான பகுதி என்பது நிம்மதி அளிப்பதாக இருந்தாலும், நிலநடுக்கத்தை தாங்கும் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது காலத்தின் கட்டாயம் என்ற அறிவுரையையும் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்