மீண்டும் கொரோனாவின் கோரமுகம்
மூன்றாவது கொரோனா அலை பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் சீனா நாட்டின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர்.;
இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு, நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அல்ல... நோய்த்தொற்று அறிகுறிகளை கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்திற்குள் பல மடங்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
சீனாவில் உள்ள மருத்துவமனைகள், தகன மேடைகள் கொரோனா மரணங்களை சமாளிக்கமுடியாமல் போராடிக்கொண்டிருக்கின்றன. சீனாவில் கொரோனாவின் ஆதிக்கம் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் பிரபல தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வூ சூன்யூ தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்தின் நடுவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளார். மூன்றாவது கொரோனா அலை பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அடுத்த 90 நாட்களில் அந்நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்றும், உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் எரிக் பீய்ஜில் டிங் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார்.