சி.ஏ. படிக்க ஆசையா...? விளக்கங்களும், வழிகாட்டுதலும்..!

ஆண்டுக்காண்டு, கணக்குத் தணிக்கையாளர்கள் எனப்படும் ஆடிட்டர்களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக ஆடிட்டர்களை உருவாக்கும் சி.ஏ. (Chartered Accountant) படிப்புக்கு மவுசு கூடி இருக்கிறது.

Update: 2023-01-03 16:03 GMT

கணக்குத் தணிக்கையாளர்கள் துணையின்றி நம்மால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது. தனிநபர்கள் தொடங்கி தொழில் நிறுவனங்கள் வரை தங்கள் வருமானத்தை சட்டப்பூர்வமாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு கைகொடுப்பவர்கள் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் கணக்குத் தணிக்கையாளர்களே!

ஒரு காலத்தில் சி.ஏ.படிப்பு பணக்காரர்களின் படிப்பாகவே கருதப்பட்டது. இன்று நிலை மாறிவிட்டது. நடுத்தர, அடித்தட்டுக் குடும்பத்துப் பிள்ளைகள் கூட சி.ஏ. படிக்க வருகிறார்கள். வழக்கமான வகுப்பறைப் படிப்பைப் போல இல்லாமல் செயல்முறைக் கல்வி, பயிற்சி என்று வித்தியாசமான பாட உள்ளடக்கங்களைக் கொண்ட சி.ஏ. படிப்புக்கு தயாராவது எப்படி?, யாரெல்லாம் சி.ஏ. படிக்கலாம்...? என்பது பற்றிய தகவல்களை தொகுத்திருக்கிறோம்.

சி.ஏ. படிப்பில் மூன்று கட்டத் தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று, சி.பி.டி எனப்படும் காமன் புரொபிசியன்சி டெஸ்ட் (Common Proficiency Test). அடுத்து, ஐ.பி.சி.சி எனப்படும் இன்டர்மீடியேட் (Intermediate) தேர்வு. மூன்றாவதாக இறுதித்தேர்வு. இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றால்தான் ஒருவர் சி.ஏ. அல்லது ஆடிட்டர் ஆக முடியும்.

* யார் படிக்கலாம்

சி.ஏ.வுக்கு விண்ணப்பிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, பிளஸ்-2 முடித்தவர்களுக்கானது. இரண்டாவது, இளங்கலை முடித்து நேரடியாக எழுதுபவர்களுக்கானது. இதில், பிளஸ்-2 முடித்தவர்கள், காமன் புரொபிசியன்சி டெஸ்ட் எழுத வேண்டும். இந்தத் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் என வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும்.

இளங்கலை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தேவையில்லை. இன்டர்மீடியட் தேர்விலிருந்து ஆரம்பிக்கலாம். பி.காம் முடித்தவர்கள் 55 சதவீதம் மதிப்பெண்ணும், மற்ற படிப்பு படித்தவர்கள் 60 சதவீதமும் எடுக்க வேண்டியது அவசியம். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றவர்களும் 'காமன் புரொபிசியன்சி டெஸ்ட்' எழுதலாம்.

இந்தத் தேர்வை எழுத 10-ம் வகுப்பு படிக்கும் போதே பதிவு செய்து பாடநூல்களைப் பெற்று தயாராகலாம். ஆனால் பிளஸ்-2 முடித்தவுடன் தான் தேர்வை எழுதமுடியும். கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல், கணிதம் அல்லது பிசினஸ் மேத்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்தவர்களுக்கு சி.ஏ.படிப்பு எளிதாக இருக்கும்.

* என்ன படிக்க வேண்டும்

காமன் புரொபிசியன்சி டெஸ்ட்டில் கேள்விகள், சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் அமையும். பன்டமென்டல்ஸ் ஆப் அக்கவுண்டிங் (Fundamentals of Accounting), மெர்க்கன்டைல் சட்டம் (Mercantile Laws), ஜெனரல் எகனாமிக்ஸ் (General Economics), குவாண்டேட்டிவ் ஆப்டிடியூட் (Quantitative Aptitude) என நான்கு தாள்கள், அவை மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு இருக்கும். இதை எழுத தேர்வுக் கட்டணமாக சில நூறுகளை செலவழிக்க வேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமான இன்டர்மீடியட் போகலாம். இந்தத் தேர்வுகள் மே மற்றும் டிசம்பர் மாதம் நடத்தப்படும். அக்கவுண்டிங் (Accounting), பிசினஸ் சட்டம் (Business Laws), எதிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (Ethics and Communication), காஸ்ட் அக்கவுண்டிங் அண்ட் பினான்சியல் மேனேஜ்மெண்ட் (Cost Accounting and Financial Management), டேக்சேஷன் (Taxation), அட்வான்ஸ்ட் அக்கவுண்டிங் (Advanced Accounting), ஆடிட்டிங் அண்ட் அசூரன்ஸ் (Auditing and Assurance), இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் ஸ்டாட்ரடஜிக் மேனேஜ்மெண்ட் (Information Technology and Strategic Management) என மொத்தம் 7 பாடப் பரிவுகள் இதில் உள்ளன.

* தேர்வுகள்

குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்குப் பதிவு செய்தவுடன் 'ஓரியண்டேஷன் புரோகிராம்' என்ற பயிற்சிக்கு செல்ல வேண்டும். அதன்பிறகு, 100 மணி நேரம் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க வேண்டும். இந்த இரண்டு பயிற்சிகளை முடித்தவர்கள் இன்டர்மீடியட் எழுதலாம்.

குரூப்-1 தேர்வில் தேர்வானவர்கள் ஆடிட்டர் அலுவலகத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சியின்போதே, இரண்டு கட்டமாக பொது மேலாண்மை மற்றும் தொடர்புத் திறன், தொழில்திறன் பயிற்சிகள் அளிக்கப்படும். இன்டர்மீடியட் தேர்வுக் கட்டணம் இரண்டு நிலைகளையும் எழுதினால் ரூ.1900. ஏதாவது ஒரு நிலை எழுதினால் ரூ.1200.

இன்டர்மீடியட் தேர்வு எழுதி இரண்டரை ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் இறுதித்தேர்வு எழுதலாம். இதில் மொத்தம் எட்டு தாள்கள். இரண்டு குரூப்பாக நடக்கும் இத்தேர்வுகளை முடிப்பவர்களுக்கு மீண்டும் சில பயிற்சிகள். அதையும் முடித்தவர்கள் ஆடிட்டராக பதிவுசெய்து கொள்ளலாம். பொதுவாக, தியரி பேப்பர்கள் கஷ்டமாக இருக்கும்.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என திட்டமிட்டு படிக்க வேண்டும். சி.ஏ. படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. குறிப்பாக, சி.ஏ., தேர்வு நடத்துகிற ஐ.சி.ஏ.ஐ. (The Institute of Chartered Accountants of India) வழங்கும் புத்தகங்களைப் படிக்க வேண்டும். 50 முதல் 60 சதவிகிதம் கேள்விகள் இதிலிருந்தே வந்துவிடும். திட்டமிட்டுப் படித்தால் நிச்சயம் சி.ஏ. படிப்பை வெற்றிகரமாக முடிக்கலாம்.

சி.ஏ. படிப்பு பற்றி கூடுதல் விவரம் அறிய: www.sircoficai.org.

குரூப்-1 தேர்வில் தேர்வானவர்கள் ஆடிட்டர் அலுவலகத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.3000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்