அடுத்து என்ன நடக்கும்... ? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திரைமறைவு "தில்லாலங்கடி" வேலைகள்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காய் நகர்த்தி உள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழி நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் திடீரென ஒற்றைத் தலைமை கோஷத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எழுப்பினார்கள்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றை தலைமை விவகாரம் முதலில் எழுப்பப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதன் பின்னர் ஒற்றை தலைமையே வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காய் நகர்த்தி உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியதும், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அவரது ஆதரவாளர்கள் காட்டமாக கருத்து தெரிவித்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அடுத்த மாதம் 11-ந்தேதி மீண்டும் கூட்டப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் போடப்படும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். இதனை மனதில் வைத்து தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் கோர்ட்டு அவமதிப்பு என்றும் இதனை எதிர்த்து வழக்கு தொடரப் போகிறோம் என்றும் அவர் கூறி இருக்கிறார். இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் விரைவில் மனுதாக்கல் செய்யப்பட உள்ளது.
அதில் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு மனுவாக அளிக்க உள்ளனர். பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டியும், அதற்கு எதிராக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது எனவும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் சட்ட நடவடிக்கைளை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் ஒருவர் கூறும்போது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ள மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்தார்.
பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவையும் அவர் பெற்று உள்ளார். தேவைப்பட்டால் இதனை கோர்ட்டில் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள் செல்லாது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான சட்ட நுணுக்கங்கள் பற்றி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு வக்கீல்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் தற்போதைய ஆதரவை வைத்துக் கொண்டு தலைமை பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினரும் திரைமறைவு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ள போதிலும், அவரது டெல்லி பயணத்தின் பின்னணியில் கட்சி விவகாரம் மறைந்திருப்பதாகவே பேசப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளித்துள்ளது. அதில், "ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. ஆகவே, ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதி வழங்கக்கூடாது" என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் அதில் ஒற்றை தலைமை பதவியை ஏற்பது பற்றியும் வியூகம் வகுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையேயான போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.