கைப்பந்து விளையாட்டில்.... திறமையான 'ஜூனியர்'களை உருவாக்கும் 'சீனியர்'..!
கைப்பந்து விளையாட்டில் பல சாதனைகள் புரிந்து, இளைஞர்களை திறமையான கைப்பந்தாட்ட வீரர்களாக உருவாக்கிய பெருமை, மகேஷ்வரனுக்கு உண்டு. 77 வயதாகும் இவர், இன்றும் சுறுசுறுப்பாக கைப்பந்து பயிற்சிகளை வழங்கி வருகிறார்.;
50 ஆண்டுகளுக்கும் மேலாக, கைப்பந்து விளையாட்டுடன் காலம் நகர்த்தி வரும், மகேஷ்வரனுடன் சிறு நேர்காணல்...
?உங்களை பற்றி கூறுங்கள்?
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் எனது சொந்த ஊர். எனது மனைவி சாவித்திரி. எனக்கு திரிவேணி, சுசித்ரா, என 2 மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
நான் பி.யூசி. படித்திருக்கிறேன். அதற்கு மேல் எனக்கு படிப்பில் நாட்டமில்லை. ஆனால் விளையாட்டு மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டது. குறிப்பாக கைப்பந்து என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் கைப்பந்தை தேர்வு செய்து விளையாடினேன். விளையாட்டு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். இதையடுத்து என்னை பயிற்சியாளராகவும் மேம்படுத்திக்கொண்டேன்.
?கைப்பந்தாட்ட போட்டிகளில் வென்றிருக்கிறீர்களா?
கைப்பந்து வீரராக களம் இறங்கி பழனியில் நடந்த மாநில போட்டியில் தங்க பதக்கம் வென்றிருக்கிறேன். அதை தொடர்ந்து ஏராளமான போட்டிகளில், விளையாடி பரிசுகளை வென்றிருக்கிறோம்.
?விளையாட்டு வீரர், பயிற்சியாளாக மாறியது எப்படி?
உடற்கல்வி பற்றி படிக்க வேண்டும் என நினைத்தேன். இதையடுத்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து 1 வருடம் உடற்கல்வி படிப்பை முடித்தேன். பிறகு வேலை தேடி சென்னைக்கு சென்றேன். அங்கிருக்கும், ராமகிருஷ்ணா பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக தேர்வாகி, 1965-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினேன்.
அப்போது அந்த பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்து அவர்களை அகில இந்திய கைப்பந்து போட்டியில் பங்கேற்க செய்து பரிசு, பதக்கங்களை வென்று கொடுத்தேன். எனது பயிற்சியை பார்த்து மற்ற அணியினரும் என்னை அணுகினர். குறிப்பாக லயோலா கல்லூரி அணிக்கு பயிற்சி அளித்து மாநில, அகில இந்திய அளவில் வெற்றி வாகை சூட செய்தேன்.
?உங்களது பயிற்சியினால், எத்தனை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இதுவரை நான் சுமார் 2,500 பேருக்கு கைப்பந்து பயிற்சி அளித்து உள்ளேன். அதில் சுமார் 1000 பேர் விளையாட்டு துறையில் சாதனை படைத்ததற்காக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் 20-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களும் அடங்குவார்கள். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள்.
தற்போது இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் உக்கிரபாண்டி, இந்திய அணி பயிற்சியாளர் வெங்கடேசன், சுந்தரம் ஆகியோர் எனது மாணவர்கள் தான். எனது மாணவி ஷாலினி தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் போட்டியில் பங்கேற்று 2-வது இடத்தை பிடித்தார். இதே போல பூங்கொடி, பிரியா, சுனிதா, ஜெனிபர் ஆகியோர் சர்வதேச விளையாட்டில் பங்கு பெற்றனர். எனது மாணவர் சந்திரசேகர் அமலாக்கத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றவர்.
?மாநில-தேசிய அணிகளுக்கு பயிற்சி வழங்கி இருக்கிறீர்களா?
நான் ராமகிருஷ்ணா பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த சமயத்தில் எனக்கு தமிழக விளையாட்டு துறையில் வேலை கிடைத்தது. இதையடுத்து சேலத்தில் காந்தி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கைப்பந்து பயிற்றுனராக பணியாற்ற தொடங்கினேன். அப்போது சப்-ஜூனியர், சீனியர் பிரிவுகளில் மாநில அளவில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றோம். சேலத்தில் எனது பயிற்சியை பார்த்து தமிழ்நாடு கைப்பந்து சங்கத்துக்கு பயிற்சி அளிக்க அழைத்தனர். அதன்படி நான் அந்த அணிக்கு பயிற்சி அளித்து வந்தேன். கேரளாவில் நடந்த போட்டியில், 11 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாடு கைப்பந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தேன். அப்போது தமிழ்நாடு கைப்பந்து கழக தலைவராக இருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் என்னை அழைத்து பாராட்டினார். இதேபோன்று பெண்கள் கைப்பந்து அணிக்கும் பயிற்சி அளித்து பதக்கம் பெற்றோம்.
சேலத்தில் பணியாற்றிய பின்னர் என்னை திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்தனர். நான் அப்போது திண்டுக்கல்லில் உள்ள இளைஞர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்தேன். எனது பயிற்சியை பார்த்து அப்போது திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சைலேந்திரபாபு என்னிடம் கைப்பந்து பயிற்சியை கற்றுக்கொண்டார்.
?போலீஸ் அதிகாரிகளும் உங்களிடம் கைப்பந்து பயிற்சி பெற்றுள்ளார்களா?
ஆம்..! இன்றைய காவல்துறையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முதல் பலர் என்னிடம் கைப்பந்து கற்று இருக்கிறார்கள். மேலும் தமிழ்நாடு போலீஸ் டி.ஐ.ஜியாக இருந்த தேவாரம், போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் இருவரும் எனது பயிற்சியை பற்றி அறிந்து என்னிடம் தமிழ்நாடு போலீஸ் அணிக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன்படி போலீஸ் அணிக்கு பயிற்சி அளித்து உள்ளேன். எனது பயிற்சியினால் சேலம் போலீஸ் அணி அகில இந்திய போட்டியில் வெற்றி பெற்றது.
?கைப்பந்து தவிர வேறு திறமைகள் உண்டா?
சிலம்பம், கிரிக்கெட், பூப்பந்து, டேபிள் டென்னிஸ், நீச்சல் போன்றவையும் தெரியும். தற்போது சிலம்பம், நீச்சல் பயிற்சி எடுத்து வருகிறேன். நடைப்பயிற்சியும் செய்வேன். நடிக்கவும் செய்வேன்.
?நடிப்பிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
நான் பிறந்தது பண்ணைப்புரம். இளையராஜாவும் எங்கள் ஊர் தான். அவர்களது இசைக்குழுவில் நானும் கிடார் வாசி்த்து இருக்கிறேன். இயக்குனர் பாரதிராஜாவுடனும் நெருங்கி பழகி இருக்கிறேன். அந்த பந்தம் எங்களுக்குள் இன்று வரை தொடர்கிறது. அந்தவகையில், அன்னக்கொடி படத்திலும், தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்திருக்கிறேன்.
?இத்தனை வயது ஆகியும் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் உணவு பழக்கம் என்ன?
எனக்கு உணவு பழக்கம் என்று எதுவும் கிடையாது. எல்லாம் சாப்பிடுவேன்.
?இளம் விளையாட்டு வீரர்களுக்கு உங்களது அறிவுைர என்ன?
விளையாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். நன்றாக விளையாடும் போது உடல் உள் உறுப்புகள் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடம்பு தான் நமக்கு மிகப்பெரிய சொத்து. இந்த சொத்து விளையாட்டின் மூலம் தான் கிடைக்கும். விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு புத்திகூர்மை பளிச்சிடும். எந்த காரியத்தையும் சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல எல்லா தரப்பினருக்கும் உடற்பயிற்சி இத்தகைய பலன்களை கொடுக்கும்.
மகேஷ்வரனின் பயிற்சி இன்று பலரது வாழ்க்கையில் ஒளி வீச செய்து உள்ளது என்றால் அது மிகையல்ல.