பிரம்மிக்க வைக்கும் கிராண்ட் பள்ளத்தாக்கு

ஒரு பள்ளத்தாக்கு, பல பெருமைகளை உள்ளடக்கி இருக்கிறது. அந்த பள்ளத்தாக்கின் பெயர், ‘கிராண்ட்’. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பிரமாண்டமாக காட்சி யளிக்கும், அதுபற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள் இதோ...

Update: 2022-10-14 12:35 GMT

பாறைகளும் உயரமான மலை உச்சிகளும் நிரம்பியதுதான் கிராண்ட் பள்ளத்தாக்கு. 277 மைல் நீளமும், 18 மைல் அகலமும், ஆறாயிரம் அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கு உருவானதன் காரணம், கொலராடோ ஆறு.

பல கோடி ஆண்டுகளுக்கு முன், இந்த இடம் பாறைகளால் ஆன, தட்டையான, ஒரு பிரமாண்ட பீடபூமியாக இருந்தது. மழையும், உருகிய பனியும், புயல் காற்றும், கொலராடோ ஆறும் இணைந்து 17 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பீடபூமியைச் செதுக்கி, பாறைகளை அரித்து, இந்த பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளது.

* பல வண்ண பாறைகள்

கிராண்ட் பள்ளத்தாக்கில் இருபது அடுக்குகளைக் கொண்ட பாறைகளைக் காண முடியுமாம். இதனால் இவ்விடம் புவியியல் நிபுணர்களின் முக்கிய ஆராய்ச்சித் தளமாக விளங்குகிறது. பாறை, மண் அடுக்குகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, ஊதா நிறங்களில் காணப்படுகின்றன. பாறைகளில் உள்ள தாதுக்கள்தான் இவற்றுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. இங்குள்ள வடக்குப் பகுதி 'வட விளிம்பு' (North rim) எனவும், தெற்குப் பகுதி 'தென் விளிம்பு' (South rim) எனவும் அழைக்கப்படுகின்றன.

சராசரியாக 8 ஆயிரம் அடி உயரமுள்ள வட விளிம்பு, தென் விளிம்பை விட ஆயிரம் அடி உயரமானதாகும். இங்கே மழை, பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால், இந்தப் பகுதி கரடுமுரடாகவும் அதலபாதாளமாகவும் செங்குத்தாகவும் இருக்கும். தென் விளிம்பு சராசரியாக ஏழாயிரம் அடி உயரத்துடன் இருக்கும். மிகவும் வறண்ட பாலைவனம் போன்ற பகுதி இது. மழை இல்லாததால், பாறைகள் அரிக்கப்படாமல், மக்கள் ஏறுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. எனவே, வருடம் முழுவதும் இப்பகுதிக்கு மக்கள் வருகை புரிகின்றனர்.

* உயிரினங்கள்

பார்ப்பதற்கு வெற்றுப் பாறையாகக் காட்சியளித்தாலும், கிராண்ட் பள்ளத்தாக்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இங்கு வாழும் ஒவ்வொரு தாவரமும், உயிரினமும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன. உலகில் வேறு எங்கும் காணமுடியாத சில தனிச்சிறப்பு வாய்ந்த விலங்குகள் இங்கே வசிக்கின்றன.

கயோட் ஓநாய், ரக்கூன், பாப்கேட், வைர முதுகு சங்கிலி கருப்பன், வழுக்கைத் தலை பருந்து, பெரிய கொம்புள்ள செம்மறியாடு, மலை சிங்கம், கைபப் அணில்கள், காஸ்ஹாக் போன்றவை இங்கு காணப்படுகின்றன.

கிலா மான்ஸ்டர், சக்வல்லா இரண்டும் இங்கு காணப்படும் மெகா பல்லிகளாகும். இங்குள்ள குட்டை கொம்பு பல்லிகள் கண்ணிலிருந்து ரத்தத்தைப் பீய்ச்சியடித்து எதிரிகளைப் பயந்தோடச் செய்யும்.

கிராண்ட் பள்ளத்தாக்கில் 100 டிகிரியிலிருந்து, மைனஸ் ஒன்று டிகிரி வரை வெப்பநிலை நிலவுகிறது. வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு வகையான சுற்றுச்சூழல்கள் காணப்படுகின்றன. பாலைவனம், பின்யான் ஜுனிபர் காடு, பாண்டரோசா பைன் காடு, ஸ்ப்ரூஸ் பிர் காடு ஆகியவை அமைந்துள்ளன.

* கண்டுபிடித்தவர்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கேப்டன் கார்ஸியா லோபஸ் என்பவர்தான் கிராண்ட் பள்ளத்தாக்கை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார். 1540-ம் ஆண்டில் ஏழு தங்க நகரங்களைத் தேடி தன் சகாக்களுடன் சென்றவர், பூமியில் தென்பட்ட மெகா பள்ளத்தைக் கண்டறிந்தார். ஆனால், உள்ளே இறங்கத் துணியவில்லை. 1869-ல் ஜான் வெஸ்லே பவல் என்பவர்தான் இந்த செங்குத்துப் பள்ளத்தாக்கில் முதன்முதலில் இறங்கினார். இதற்கு 'கிராண்ட் கேன்யன்' என்று பெயர் சூட்டியவரும் இவரே!

1919-ல் இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

* யுனஸ்கோ அங்கீகாரம்

தென் விளிம்பின் பாலை வனப் பகுதியில் 70 அடி உயர காவல் கோபுரம் உள்ளது. 1932-ல் நான்கு மாடிக் கட்டிடமாக 'மேரி கோல்டர்' என்ற அமெரிக்க கட்டிடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது.

கிராண்ட் பள்ளத்தாக்கில் பார்வையாளர்களைச் சிலிர்க்கச் செய்யும் மற்றொரு அதிசயம் 'ஸ்கைவாக்' ஆகும். குதிரைக் குளம்பு வடிவில் கண்ணாடித் தரையுடன், சுமார் 4770 அடி உயரத்தில், எழுபது அடி தூரம் வெளியே நீண்டவாறு அமைக்கப்பட்ட பிடிமான பாலம் (cantilever bridge) இது. 2007-ல் திறக்கப்பட்ட இந்தப் பாலத்தின் மேல் நின்று திகிலுடன் செங்குத்துப் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கலாம்.

இந்த செங்குத்துப் பள்ளத்தாக்கு உலகிலேயே உயரமானதோ, அகலமானதோ, ஆழமானதோ இல்லை. ஆனால், இதன் இயற்கை அழகை ரசிப்பதற்காக வருடந்தோறும் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். 1979-ல் கிராண்ட் பள்ளத்தாக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்