உயரமான பெண்மணிக்காக விமானத்தில் செய்யப்பட்ட மாற்றம்

உலகின் உயரமான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த ருமேசா கெல்கிக்கு விமானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-11-13 15:53 IST

விமானத்தில் பயணிப்பது பலருடைய வாழ்நாள் கனவாக இருக்கும். அது சாத்தியமாவதற்கு பொருளாதாரம்தான் இடம் கொடுக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் விரும்பிய சமயங்களில் எல்லாம் விமானத்தில் பயணித்துவிட முடியும். மற்றவர்களுக்கு பணம்தான் தடையாக இருக்கும். ஆனால் உலகின் உயரமான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த ருமேசா கெல்கிக்கு அவரது உயரம்தான் விமான பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அவரது உயரம் 7 அடி 0.7 அங்குலம். ருமேசா வீவர் சிண்ட்ரோம் என்ற அரிய வகை மரபணு நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். இது எலும்பு வளர்ச்சிக்கு வித்திடும் அரிய மரபணு தன்மை கொண்டது. அதனால் குழந்தை பருவத்தில் இருந்தே ருமேசா உயரமாக இருக்கிறார். அவரது விரல், கைகள், முதுகு என முக்கிய உடல் பகுதிகள் மற்றவர்களை விட நீளமானவை. அதனால் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.

25 வயதாகும் ருமேசாவின் பூர்வீகம் துருக்கி. தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கராபூர் என்ற பகுதியில் வசிக்கிறார். அவரால் மற்றவர்களை போல் இயல்பாக நடமாட முடியாது. அதற்கு அவரது உடல் ஒத்துழைக்காது. சக்கர நாற்காலி, ஊன்றுகோல் துணையுடன்தான் வெளி இடங்களுக்கு செல்கிறார். விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது ருமேசாவின் ஆசைக்கனவாக இருந்திருக்கிறது. ஆனால் விமானத்தின் இருக்கையில் அமருவதற்கு அவரது உயரமும், உடல் அமைப்பும் தடையாக அமைந்துவிட்டது. அவரால் கால்களை மடக்கிய நிலையில் நீண்ட தூர பயணத்தை தொடர முடியாது.

சமீபத்தில்தான் அவரது விமான பயண ஆசை நிறைவேறி இருக்கிறது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் ருமேசா சவுகரியமாக பயணிப்பதற்கு ஏதுவாக விமானத்தில் 6 இருக்கைகளை நீக்கியது. அந்த வெற்றிட பகுதியில் ஸ்ரெச்சர் போன்ற கட்டமைப்பை நிறுவியது. அதில் படுத்துக்கொண்டு ருமேசா பயணிப்பதற்கு ஏதுவான வசதிகள் செய்யப்பட்டன. இதையடுத்து ருமேசா முதல் முறையாக விமானத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தார். துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார். சுமார் 13 மணி நேரம் நீடித்த இந்த பயணத்தை ஸ்ரெச்சர் போன்ற அமைப்பில் படுத்தபடியே தொடர்ந்திருக்கிறார். ஆனாலும் தனது பயணம் இனிமையாக அமைந்ததாக கூறுகிறார்.

''ஆரம்பம் முதல் முடிவு வரை எந்தவொரு குறைபாடுமற்ற பயணமாக அமைந்தது. இது எனது முதல் விமானப் பயணம். நிச்சயமாக எனது கடைசி பயணமாக இருக்காது என்று நம்புகிறேன். எனது பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றி'' என்று குறிப்பிட்டுள்ள ருமேசா, தனது பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்