வரைந்த 108 விநாயகர் ஓவியங்களையும் காட்சிப்படுத்துகிறார் ஸ்ரீநிதி
மஞ்சள் மற்றும் குங்குமம் இவை இரண்டையும் கொண்டு, 108 விநாயகர் ஓவியங்களை வரைந்திருக்கிறார், ஸ்ரீநிதி. அதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.;
சிறுவயது முதலே ஓவிய கலையில் அதீத ஆர்வம் காட்டிவரும் ஸ்ரீநிதி, திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனி பகுதியை சேர்ந்தவர். அருகில் இருக்கும் புஷ்பலதா வித்யாலயாவில் 12-ம் வகுப்பு படிப்பதுடன், ஓவிய வகுப்பிலும் பயிற்சி பெறுகிறார்.
''என் பூர்வீகம் திருநெல்வேலி என்றாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். 3-ம் வகுப்பு படிக்கும்போதே ஓவியம் வரைய பழகினேன். ஓவியத்திறனை மெருக்கேற்றும் விதமாக, சென்னையில் ஓவிய பயிற்சியும் பெற்றேன். 5-ம் வகுப்பு படிக்கையில், திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் இடம் மாறியதும், இங்கிருக்கும் சிவராம கலைக்கூடத்தில் பயிற்சி பெற தொடங்கினேன். இங்குதான், அக்ரிலீக் ஓவியம், ஆயில் ஓவியம், வாட்டர் கலர் ஓவியம், பென்சில் ஷேடோ ஓவியங்களை திறம்பட வரைய கற்றுக்கொண்டேன்'' என்று தன்னுடைய ஆரம்பகால ஓவியங்களை காண்பித்து மகிழும் ஸ்ரீநிதி, இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்.
''இதுவரை நான் வரைந்த ஓவியங்கள், கலைக்கூடம் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல கொரோனா காலங்களில், வீட்டிலேயே ஓவிய கண்காட்சி ஒன்றையும் நடத்தியிருக்கிறேன்'' என்று பொறுப்பாக பேசும் ஸ்ரீநிதி, இயற்கை காட்சிகள் வரைவதில் கைதேர்ந்தவர். குறிப்பாக வண்ணங்களை சிறப்பாக கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர்.
''கடந்த வருடம் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி அன்றே, விநாயகர் ஓவியங்களை வரைய தொடங்கிவிட்டேன். குறிப்பாக மஞ்சள் மற்றும் குங்குமம் இவை இரண்டையும் மட்டுமே பயன்படுத்தி, விநாயகரின் ஓவியங்களை வரைய முற்பட்டேன். என்னுடைய ஓவிய ஆசிரியர் கணேசனின் வழிகாட்டுதலில், 108 விதமான விநாயகர் ஓவியங்களை வரைய திட்டமிட்டேன். இவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஸ்டைலில் இருக்கும்.
அம்மன் வடிவில் விநாயகர் தோன்றுவது போலவும், ஐந்து முகம், 10 கைகளுடன் காட்சி தருவது போன்றும், கொழுக்கட்டையை கட்டி அணைப்பது போலவும்... இப்படி 108 ஸ்டைலில், விநாயகரை, ஒரு வருடத்திற்குள் வரைந்து முடிக்க திட்டமிட்டேன்'' என்றவர், அதை சிறப்பாக செய்து முடித்து, சமீபத்தில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் 108 ஓவியங்களையும் காட்சிப்படுத்தி இருந்தார்.
''மஞ்சள் மற்றும் குங்குமம் தெய்வீகத்தின் அடையாளமாகவும், கிருமி நாசினியாகவும் கருதப்படுவதால் அதை கொண்டே 108 ஓவியங்களையும் வரைந்து முடித்தேன். சிவப்பு நிற குங்குமத்தை கொண்டு ஓவியத்திற்கான 'அவுட்லைன்' வரைந்து அதன் உட்பகுதிகளை மஞ்சள் கொண்டு வண்ணம் பூசினேன். இயல்பான ஓவிய பெயிண்டிற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், நீர் குழைத்து பூசக்கூடிய மஞ்சள் காய்ந்ததும் உதிர்ந்துவிடும். அதனால் அதை இருமுறை பூசி வண்ணமடிக்க வேண்டி இருந்தது. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது'' என்று ஓவிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஸ்ரீநிதி, பள்ளிப்படிப்பிற்கு நேரம் ஒதுக்கி கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் ஓவியம் வரைந்திருக்கிறார்.
''வார விடுமுறைகளில் ஒரு ஓவியத்தை முழுமைப்படுத்திவிடுவேன். இதுவே பள்ளி செல்லும் நாட்களாக இருந்தால், ஒரு ஓவியத்தை முடிக்க 2 முதல் 3 நாட்கள் ஆகும். 108 ஓவியம் வரைவது மட்டுமே என்னுடைய திட்டமாக இருந்தது. ஆனால் ஓவிய ஆசிரியர் கணேசன் தான் அதை கின்னஸ் சாதனையாக பதிவதற்கு வழிகாட்டினார். அதன்படியே, என்னுடைய முயற்சியை கின்னஸ் சாதனைக்கு பதிந்திருக்கிறேன்'' என்று உற்சாகமாக பேசுபவர், இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அம்மா வித்யாலட்சுமி, அப்பா கிருஷ்ணகுமார் மற்றும் ஓவிய ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி கூறினார்.