குழந்தைகள் போல் தூங்க வைக்கும் உணவு வகைகள்
தூக்க ஹார்மோன் எனப்படும் மெலடோனின் தூங்குவது, விழிப்பது ஆகிய இரு சுழற்சிகளும் சீராக நடைபெறுவதற்கு உதவுகிறது.;
இருள் சூழ்ந்த அறையில் இந்த ஹார்மோன் அளவு குறைவாகவும், பிரகாசமாக ஒளிரும் அறையில் அதிகமாகவும் இருக்கும். ஆனால் ஒளி மட்டுமே மெலடோனின் அளவை கட்டுப் படுத்துவதில்லை. ஒரு சில உணவு பழக்கங்களை பின்பற்றினால், குழந்தைகளை போல் இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.
பால்: இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகும் பழக்கம் முன்னோர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பசுவின் பாலில் மெலடோனின் நிறைந்திருக்கிறது. அதனால் பால், தூக்கத்தை தூண்டும் பானமாக அறியப்படுகிறது. ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறது.
வாழைப்பழம்: விதை இல்லாத இந்த பழத்திலும் மெலடோனின் அதிகமாக இருக்கிறது. இதனை சாப்பிடுவது தூக்கத்தை வரவழைக்க உதவும். மேலும் வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் தூக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.
நட்ஸ் வகைகள்: தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் அனைத்து வகையான நட்ஸ்களையும் சாப்பிடலாம். குறிப்பாக பாதாம், பிஸ்தா இரண்டும் மெலடோனின் நிரம்ப பெற்றவை. அதிக மெக்னீசியமும் கொண்டவை. இவை இரவில் தூக்கத்தை தூண்டி நன்றாக ஓய்வெடுக்க வழிவகுக்கும்.
முட்டை: புரதங்கள், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முட்டையில் உள்ளன. மேலும் முட்டைகள் இயற்கையாகவே மெலடோனின் அளவை அதிகரிக்க செய்யக்கூடியவை. தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்து போராடக்கூடியவை. மேலும் பார்கின்சன், அல்சைமர் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த உதவும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகளையும் தடுக்கும் தன்மை முட்டைக்கு உண்டு.
மீன்: மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாது மெலடோனினும் நிறைந்திருக்கும். இதய ஆரோக்கியத்திற்கும், சிறந்த தூக்கத்திற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் மீன் சிறந்த உணவாக கருதப்படுகிறது.