பள்ளிகளை அலங்கரிக்கும் 'மறுசுழற்சி பொருட்கள்'
பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து அங்கன்வாடி மையங்களுக்கு பெஞ்சுகள் தயார் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நண்பர்கள்.;
இதற்காக சர்பராஸ் அலி என்பவர் தன்னுடைய தோழி சாக்ஷியுடன் சேர்ந்து பிரத்யேக நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.மகாராஷ்டிரா முழுவதுமுள்ள அங்கன்வாடிகளுக்கும், பள்ளிகளுக்கும் பெஞ்சுகள் மற்றும் மேஜைகளை தயாரித்து வழங்குவதுதான் இவர்கள் நிறுவனத்தின் பணி. அவை பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு மறுசுழற்சி செய்யப்பட்டவை என்பது சட்டென்று பார்த்தால் தெரியாது என்பதுதான் சிறப்பம்சம். அந்த அளவுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், கலை வடிவத்துடனும் அவை அமைந்திருக்கின்றன.
சர்பராஸ் அலி-சாக்ஷி இருவரின் முயற்சியால் பல அங்கன்வாடி மையங்களும், பள்ளிகளும் புதுப்பொலிவு பெற்றுக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளை கவரும் அம்சங்களுடன் மேஜைகளும், பெஞ்சுகளும் அமைந்திருப்பதால் அவர்களும் உற்சாகத்துடன் அவற்றை உபயோகப்படுத்துகிறார்கள். இருவரும் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவற்றில் சமூக அக்கறை கலந்திருந்தது. புதுப்புது சமூக பணிகளையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.
இது குறித்து சாக்ஷி கூறுகையில், ''நாங்கள் வசித்த பகுதியில் பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பாட்டில்கள் குவிந்து கிடந்தன. அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளானது. சாலை வழியாக பயணிக்கும்போது, நிறைய பேர் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி எறிந்துவிட்டுப் போவதை பார்த்தோம். குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.
பின்பு பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுப்பவர்கள், அதை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம். அவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை மொத்தமாக ஓரிடத்தில் குவிக்கிறார்கள். பின்பு அவைகளை உருக்கிவிடுகிறார்கள். அப்படி உருக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள்தான் பலதரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிற்காக, அனுப்பி வைக்கப்படுகின்றன'' என்பவர் இந்த செயல்முறையின்போது ஏற்படும் பாதிப்புகளை பகிர்ந்து கொண்டார்.
''பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த இது உதவினாலும், உருக்கும்போது காற்றில் மாசு ஏற்படுத்தும் சூழல் உருவாகிறது. பிளாஸ்டிக்கை உருக்குவதற்கு செலவும் அதிகம் ஆவதோடு, காற்றில் நச்சுகளையும் அதிகம் வெளியிடுகிறது. இந்த நிலை தொடரும்போது சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டறிய திட்டமிட்டோம். பிளாஸ்டிக் கழிவுகளை உருக்காமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் சிற்பங்கள் மற்றும் பயன்பாட்டு பொருட்களை தயாரிக்க தொடங்கினோம்.
இதுவரை 150 டன் எடையுள்ள பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பெஞ்சுகள், மேஜைகள் தயாரித்துள்ளோம். இவற்றை மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு வழங்கி வருகிறோம்" என்றார்.
சர்பராஸ் அலி ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். அதனையே தாங்கள் தயாரிக்கும் மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்களை அலங்கரிப்பதற்கு பயன் படுத்திவிட்டார்.
"என் வாழ்க்கைப் பயணத்தை நான் வரையும் ஓவியம் பிரதிபலிக்கிறது. இயற்கையை ரசிப்பதற்காகவே பல நாட்களை செலவிட்டுள்ளேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணியாற்றியபோதுதான், இயற்கை அன்னைக்கு ஏற்படும் சேதத்தின் உண்மையான அளவை உணர்ந்தேன்.
அப்போதுதான் பூமியை பாதுகாப்பது பற்றி சிந்தித்து, ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்தேன். உலகின் பெரிய ராட்டையை பிளாஸ்டிக்கில் செய்தோம். பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.