பலம் நிறைந்த யானைகளும், பலே தகவல்களும்..!

யானை, உயிரினங்களிலேயே மிகப்பெரிய விலங்கு. இதன் வாழ்நாள் எழுபது ஆண்டுகள். ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது உள்ளது.;

Update:2022-07-01 19:24 IST

சிங்கம், சிறுத்தை... போன்ற வலிமையான விலங்கினங்களுக்கு இணையான வலிமை கொண்டது. அதேபோல வேட்டை விலங்குகளை தன் பக்கம் நெருங்கவிடாமல், பார்த்துக்கொள்ளும் 'பலே' விலங்கு யானை.

உணவு

யானை, ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை உணவு சேகரிப்பதற்கு செலவு செய்கிறது. இவற்றின் செரிமானத்திறன் மிக மந்தமானது. உண்பதில் 40 விழுக்காடே செரிமானமாகிறது. எனவே அளவுக்கு அதிகப்படியான உணவை இவை உட்கொள்ள வேண்டியுள்ளது. வளர்ந்த யானை நாள் ஒன்றிற்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவை உட்கொள்கிறது.

வகைப்பாடு

யானைக் குடும்பத்தில் மொத்தம் மூன்று சிற்றினங்கள் உள்ளன. ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் இவை மூன்றும்தான் அவை. இந்த இனங் களுக்கு இடையே பல வேறுபாடுகள் உண்டு. இனங்களுக்கு தக்க, நிலத்திற்கு ஏற்ப குணநலன்கள், அங்க மாறுபாடுகள் ஏராளம் உள்ளன.

ஆப்பிரிக்க யானை

ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட அளவில், உருவத்தில் பெரியவை. ஆப்பிரிக்க யானைகளுக்கு காது மடல்கள் பெரியதானவை. ஆண், பெண் இரண்டிற்கும் நிகரானத் தந்தங்கள் உண்டு. ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. சில யானைகளுக்கு மட்டும் அரிதாக இருக்கலாம்.

ஆப்பிரிக்க யானைகளின் தலையையொட்டி உள்ள முதுகுபுறம் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் அல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். முன்னங்கால்களில் நான்கு முதல் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும்.

ஆசிய யானை

ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியதாகவும் இருக்கும். இவற்றிற்கு துதிக்கை நுனியில் மேல் நோக்கியவாறு ஓரிதழ் மட்டுமே இருக்கும். ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6 ஆயிரம் கிலோ எடையையும் கொண்டிருக்கும். யானையின் தோல் சுமார் 3 செ.மீட்டர் தடிமனாக இருக்கும். யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலையின் மீதும் செங்குத்தான இடங்கள் மீது சரளமாக ஏறவும் இறங்கவும் செய்யும். அந்தத் திறன் அவற்றிற்கு அதிகமாகவே உண்டு. யானையின் துதிக்கை மிக விஷேச மானது. மொத்தம் 40 ஆயிரம் தசைகளால் ஆனது. இந்தத் துதிக்கையினால் பெரிய மரக் கிளைகளை ஒடிக்கவும், அதனால் முடியும். அதோடு பெரும் சுமை களையும் துதிக்கையினால் இவை தூக்கிச் சுமக்கின்றன. உணவை எடுக்கவும், நீர் அருந்தவும் யானை தன் துதிக்கையை பயன்படுத்திக் கொள்கிறது.

தந்தம்

யானைத் தந்தங்களுக்கு யானைக்கோடு என்ற சிறப்பு பெயரும் உள்ளது. இந்தக் கோடானது யானையின் கடவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதற்கு எயிறு, தந்தம் என்ற இதர பெயர்களும் இருக்கின்றன. தந்தம் என்றால் பல் என்று பொருள். சராசரியாக தந்தங்கள் பத்து அடி வரை வளரும். அதோடு இத்தந்தங்கள் சுமார் 90 கிலோ எடை கொண்டிருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்