ஓவியங்களில் இருந்து மேக்கப் கற்றுக்கொண்ட மலேசிய தமிழர்..!
மலேசியாவை சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞர் கண்ணன் ராஜமாணிக்கம், மேக்கப் கலையை விரும்பும் பலருக்கும் ‘ரோல் மாடல்’ எனலாம். இவர் எந்தவித மேக்கப் பயிற்சிகளும் இன்றி, தன்னை தானே மேக்கப் கலைஞராக மெருகேற்றிக்கொண்டவர். அது எப்படி சாத்தியமானது என்பதை அவரே விளக்குகிறார்.;
* மேக்கப் துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
தமிழகம் என் பூர்வீகம் என்றாலும், நான் பிறந்து வளர்ந்தது மலேசியா. அங்கு நடைபெற்ற விழாக்களுக்கு செல்லும்போதெல்லாம், ஒரு விஷயத்தை கண்கூடாக காண முடிந்தது. அதாவது மேக்கப் செய்யாதவர்களை காட்டிலும், மேக்கப் செய்து வருபவர்களுக்கு தனி மரியாதை வழங்கப்படுவதை போல உணர்ந்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. 'மேக்கப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளதா?' என சிந்திக்க வைத்தது. இதைப்பற்றி என் சகோதரிகளிடம் தெரியப்படுத்தினேன். அத்துடன், அவர்கள் எந்த பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும், அதற்கு முன்பாக நானே அவர்களுக்கு மேக்கப் செய்துவிட முயற்சித்தேன். அப்படி பழக்கமானதுதான், மேக்கப் கலை.
* எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?
என்னுடைய சகோதரிகள்தான், என்னுடைய மேக்கப் மாடல்கள். நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பணம் செலவழித்து மேக்கப் செய்ய வசதியில்லை. வீட்டிலேயே மேக்கப் செய்ய ஆசைப்பட்டாலும், அதற்கான பொருட்கள் இல்லை. ஆரம்ப காலங்களில் மேக்கப் செய்துவிட 'மேக்கப் பிரஷ்' கூட கிடையாது. கைகளாலேயே பவுடர்களை முகத்தில் பூசிவிடுவேன். இருப்பினும், அந்த எளிமையான மேக்கப் எங்கள் சகோதரிகளை மேலும் அழகாக காட்டியது. அவர்களுக்கும் நம்பிக்கையை கொடுத்தது. பிறகு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் என்னுடைய ஸ்டைலிலேயே மேக்கப் செய்துவிட ஆரம்பித்தேன்.
* உங்களுடைய எளிமையான மேக்கப் யுக்திக்கு வரவேற்பு கிடைத்ததா?
நான் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு கிடைத்தது. ஆம்..! என் சகோதரிகளுக்கு நான் செய்துவிடும் 'மேக்கப்-ஐ' பார்த்து, சில தோழிகள் அவர்களது திருமணத்திற்கு மேக்கப் செய்துவிடுமாறு கேட்டனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே, அதை ஏற்றுக்கொள்ள தயக்கமாகவும் இருந்தது. இறுதியில் ஒப்புக்கொண்டேன்.
பாலிவுட் நடிகைகளின் மேக்கப்பை வீடியோக்களாக திரட்டி, அதிலிருந்து குறிப்பெடுத்து, என்னுடைய ஸ்டைலில் வித்தியாசமாக மேக்கப் செய்துவிட்டேன். அது மலேசிய மக்கள் எதிர்பாராத வண்ணம் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால் அனைவராலும் பாராட்டப்பட்டது. பல தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்தது.
* அதற்கு பிறகாவது முறையான பயிற்சி எடுத்தீர்களா?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மேக்கப்பிற்காக நான் இதுவரை யாரிடமும் பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை. சிகை அலங்காரத்திற்கு மட்டும் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்காக வட இந்தியா சென்றுவந்தேன். ஆரம்பத்தில் எனக்கென எந்தவித பிரத்யேக பார்முலாவும் கிடையாது. கலை ரசனை என்பதை மட்டுமே முன்னிறுத்தி, எளிமையான பொருட்களை கொண்டு மேக்கப் செய்து வந்தேன். ஆனால் இப்போது, மேக்கப் கலையில் இருக்கும் எல்லா யுக்திகளையும், செய்முறை பயிற்சியாக கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களையே, என் மேக்கப் யுக்தியின் மையப்பொருளாக மாற்றியிருக்கிறேன்.
* எந்தவிதமான பயிற்சியும் இன்றி, மேக்கப் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
கோவில் கோபுர சிலைகளையும், சிற்பங்களையும் என்னுடைய இன்ஸ்பிரேஷனாக வைத்திருக்கிறேன். கோவிலில் வரையப்பட்டிருக்கும் பெண் சிற்பங்களில் வண்ணங்கள் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும். முகம், மூக்கு போன்றவை சிலை மற்றும் சிற்பங்களில் மிகச்சிறப்பாக இருக்கும். கண்களில் வண்ணங்கள் 'ஐ-மேக்கப்' போட்டது போல் தெளிவாக இருக்கும். சிலைகளில் உள்ள உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மிக நேர்த்தியாக இருக்கும்.
தஞ்சாவூர் ஓவியங்களில் இருந்தும் நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். பிரைடல் மேக்கப் நிறைய செய்து மேலும் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.
* மேக்கப் கலைஞர் ஆவதற்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
இயற்கையாகவே இந்த திறமை அவர்களுக்குள் இருக்க வேண்டும். மேக்கப் கலைஞர்களுக்கு சிறந்த முறையில் கலர் சென்ஸ் இருக்க வேண்டும். அதாவது என்ன மாதிரியான நிறங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவர்கள் ஒரு நல்ல ரசனை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
* எவ்வளவு ஆண்டுகளாக மேக்கப் செய்கிறீர்கள்?
நான் கடந்த பத்து ஆண்டுகளாக மேக்கப் துறையில் உள்ளேன். மேக்கப் கலை தினம் தினம் புதுப்புது நுணுக்கங்களை கற்றுக்கொடுக்கிறது. கொரோனா காலங்களில், மலேசியாவில் இருந்தபடியே நிறைய புதுமைகளை முயற்சித்தேன். அதில் குறிப்பாக நடிகை நயன்தாரா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை போலவே 'ரீ கிரியேசன்' மேக்கப் செய்தேன். அது பலராலும் பாராட்டப்பட்டது.
* எந்த எந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்?
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் இருக்கக் கூடிய எல்லா நாடுகளுக்கும் சென்று மேக்கப் செய்திருக்கிறேன். சில நாடுகளில் மணப்பெண் அலங்காரம் மற்றும் பேஷன் ஷோ, விளம்பர படங்கள் போன்ற இதர நிகழ்வுகளிலும் கலந்து வருகிறேன்.
* மேக்கப் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
சினிமா நடிகைகள் என்பதை தாண்டி, இன்று எல்லோரும் மேக்கப் செய்து கொள்கிறார்கள். அதேபோல விழாக்கள் என்பதை தாண்டி, அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் மேக்கப் போட பழகிவிட்டனர். கூடவே மணப்பெண்ணுடன் சேர்த்து, மணமகன், உறவினர்கள் என எல்லாதரப்பினரும் மேக்கப் செய்து கொள்ள ஆர்வம் காட்டுவதால், மேக்கப் கலைக்கும், கலைஞர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. எதிர்காலத்தில், மேக்கப் அழகு சாதனப்பொருட் களை எல்லோர் வீட்டிலும் வெகு இயல்பாகவே பார்க்கமுடியும். கூடவே, ஒவ்வொருவரும் தானா கவே மேக்கப் செய்து கொள்ள பழகிவிடுவர்.