புடவை அணிந்து பளுதூக்கும் 56 வயது பெண்மணி

புடவை அணிந்து சர்வ சாதாரணமாக பளுதூக்கி அசத்திக்கொண்டிருக்கிறார், சோமசுந்தரி மனோகரன். 56 வயதாகும் இவரது பளுதூக்கும் சாகசம், இளம் பெண்களுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கிறது.

Update: 2023-01-16 09:43 GMT

 

சிறு வயது முதலே பாரம்பரிய உடை அணிந்தே பழகிவிட்டேன். சுடிதார் உடுத்துவதற்கு கூட நான் விரும்பியதில்லை. அதனால் பளுதூக்கும் போட்டிக்குரிய உடை அணிய விரும்பவில்லை. இதுநாள் வரை எல்லா பயிற்சி களையும் புடவை அணிந்தே செய்து பழகிவிட்டேன். அதனால் எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை.

புடவை அணிந்து சர்வ சாதாரணமாக பளுதூக்கி அசத்திக்கொண்டிருக்கிறார், சோமசுந்தரி மனோகரன். 56 வயதாகும் இவரது பளுதூக்கும் சாகசம், இளம் பெண்களுக்கு சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவரும், இவரது மருமகள் மணிமொழியும் போட்டிப்போட்டு பளு தூக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. தான் இத்தகைய உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு மூட்டுவலியால் அவதிப்பட்டதுதான் காரணம் என்கிறார்.

சோமசுந்தரி மனோகரன், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். படப்பை அடுத்த சாலமங்கலம் கிராமம் இவரது பூர்வீகம். கணவரின் குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. வீட்டு வேலைகளுடன் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். குடும்பத்தினர் நடத்தி வந்த ரைஸ் மில்லிலும் வேலை பார்த்திருக்கிறார். இத்தகைய உடல் உழைப்புடன் கூடிய வேலைகளில் இருந்து விடுபட்டு நகர வாழ்க்கைச்சூழலுக்கு நுழைந்ததும், வீட்டுக்குள்ளேயே முடங்கி போனதும் மூட்டுவலி போன்ற நோய் பாதிப்புகளை அனுபவிக்க வைத்துவிட்டது என்பவர், அதில் இருந்து மீள்வதற்கு பளு தூக்கும் பயிற்சியை கையில் எடுத்ததற்கான காரணத்தை விவரிக்கிறார்.

''திருமணத்திற்கு பிறகு களை எடுத்தல், நடவு செய்தல், அறுவடை செய்தல் என அனைத்து விவசாய வேலைகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ரைஸ் மில்லும் நடத்தி வந்ததால் இரு வேலைகளையும் முழுமூச்சோடு செய்தேன். நெல் விதைத்து, நடவு செய்து, அறுவடைக்கு பிறகு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை ரைஸ் மில்லில் வேக வைத்து, உலர வைத்து, பின்பு அரிசியாக மாற்றும் செயல்முறை அப்போதெல்லாம் உடல் உழைப்பு சார்ந்ததாக இருந்தது.

நெல்லை கைகளால் அள்ளிப்போட்டு வேகவைப்போம். அவை வெந்த பிறகு தரையில் கொட்டி பரப்பி வைப்போம். வயல்களில் மாடு பூட்டி உழுவதுபோல் வேகவைத்த நெல் மணிகளை அடுக்கடுக்காக பரப்பி உலர வைப்போம். பின்பு அவற்றை கைகளால் அள்ளி, தூக்கி சுமந்து ரைஸ் மில் சாதனத்தில் கொட்டி அரிசியாக மாற்றுவோம். அந்த செயல்முறை உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைந்திருந்தது. இப்போதெல்லாம் நெல்லை வேகவைத்து அரிசியாக மாற்றும் செயல்முறை எளிதாகிவிட்டது. முன்பு போல் உடல் உழைப்பை கொடுக்க வேண்டியதில்லை.

விவசாய தொழிலும் ரொம்பவே மாறிவிட்டது. வயலில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. அதனால் சிரமத்திற்கு ஆளானோம். எங்களுக்கு மஞ்சு பிரியா, கார்த்திகேயன் என இரு பிள்ளைகள். தொழில் நலிவடையவே, பிள்ளைகளின் படிப்புக்காக நகரத்திற்கு குடியேறி வந்தோம்'' என்பவர் கிராமத்து சூழலில் இருந்து நகர வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். முன்பு போல் உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் இல்லாமல் வீட்டுக்குள் முடங்கியது உடல் பருமன், மூட்டுவலி போன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிட்டது.

''நான் சென்னைக்கு வந்தபோது 48 கிலோ இருந்தேன். கடினமான வேலை செய்து பழக்கப்பட்ட எனக்கு, இங்கு வீட்டு வேலைகள் மட்டுமே செய்ததும், உணவு பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றமும், அதனை சாப்பிடுவதற்கு ஏற்ப உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாமல் போனதும் உடல் பருமன் பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது.

70 கிலோ வரை உடல் எடை கூடிவிட்டேன். கால் வலி, மூட்டு வலியாலும் அவதிப்பட்டேன். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். ஆனால் ஆபரேஷன் செய்த பிறகு அதிகமாக குனியக்கூடாது, தரையில் உட்காரக்கூடாது, டேபிள் சேரில்தான் அமர வேண்டியிருக்கும் என்றார்கள். மீண்டும் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழலுக்கு தள்ளப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை'' என்றவருக்கு மகன் மூலம் உடற்பயிற்சி அறிமுகமாகி இருக்கிறது.

''எனது மகன் கார்த்திகேயனுக்கு முதுகுவலி பிரச்சினை இருந்தது. அவன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றினான். அதன் மூலமாகவே முதுகுவலியை போக்கிவிட்டான். அதை பார்த்ததும் எனக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் உண்டானது. ஆரம்பத்தில் சின்ன, சின்ன பயிற்சிகளை செய்தேன். படிக்கட்டு ஏறுதல், பின்பு பின்னோக்கி படிக்கட்டில் இறங்குதல், ஸ்குவாஷ் போன்ற பயிற்சிகள் எனக்கு உத்வேகம் அளித்தன. பின்பு மூட்டு வலி, கால் வலியை போக்கும் பயிற்சிகளை முறைப்படி செய்யத் தொடங்கினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

ஆரம்பத்தில் டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டே பயிற்சிகளை செய்து வந்தேன். உடல் நலனில் மாற்றம் தெரியவே மாத்திரைகளை படிப்படியாக குறைத்துக்கொண்டேன். இப்போது மூட்டுவலி பிரச்சினையில் இருந்தும் முழுமையாக விடுபட்டுவிட்டேன். அதற்கு காரணம் உடற்பயிற்சிதான். அதனால் உடற்பயிற்சி செய்வதற்கு பெண்கள் தயங்கக்கூடாது. தினமும் ஏதாவதொரு பயிற்சி செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

''40 வயதை கடந்த பிறகு மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகுவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. உண்ணும் உணவிற்கு ஏற்ப உடல் இயக்கம் இல்லாமல் போவதுதான் அதற்கு காரணம். நகர சூழலில் வாழ்பவர்களுக்கு உடற்பயிற்சி மட்டுமே உடல் உழைப்பு சார்ந்த வேலையாக அமைந்திருக்கும். ஏதாவதொரு வகையில் உடலுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை, அதனை செய்வதில் ஆர்வமுமில்லை என்றால் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். தினமும் அரை மணி நேரம் சாதாரணமாக நடந்து சென்றாலே போதுமானது.

''எனது பெற்றோர் சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். அது மரபணு ரீதியாக எனக்கும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். உடற்பயிற்சி செய்வதால் எனக்கு அத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. வயது அதிகரிக்கும்போது ஆண்களை விட பெண்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் உடற்பயிற்சி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. தினமும் கட்டாயம் ஏதாவதொரு பயிற்சி செய்ய வேண்டும்'' என்பவர்

 

பளுதூக்கும் பயிற்சியை தொடர்வது குறித்து சொல்கிறார்.

''என் மகன் முதுகுவலியில் இருந்து மீள்வதற்கு உடற்பயிற்சிகள் காரணமாக அமைந்ததால் அதில் அதிக ஈடுபாடு கொண்டான். சொந்தமாக ஜிம் அமைத்து பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறான். நானும் அங்கு எல்லா வகையான பயிற்சிகளையும் செய்வதற்கு பழகினேன். அப்போது பளுதூக்கும் பயிற்சியை சிலர் மேற்கொள்வதை பார்த்தேன். நான் ஏற்கனவே ரைஸ் மில்லில் நெல்களை பாத்திரங்களில் தூக்கி கொட்டி பழகி இருந்ததால் எடை தூக்குவது எனக்கு சிரமமாக தோன்றவில்லை.

பளுதூக்குவதும் அதுபோலவே இருந்ததால் முயன்று பார்த்தேன். சில நாட்களிலேயே பளுதூக்கும் நுட்பங்களை புரிந்து கொண்டேன். முறையாக பயிற்சி பெற்றேன். நான் நன்றாக பளுதூக்குவதை பார்த்து போட்டியில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் அதற்குரிய உடை அணிந்துதான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் எனக்கு அதில் விருப்பமில்லை. சிறு வயது முதலே பாரம்பரிய உடை அணிந்தே பழகிவிட்டேன். சுடிதார் உடுத்துவதற்கு கூட நான் விரும்பியதில்லை.

அதனால் பளுதூக்கும் போட்டிக்குரிய உடை அணிய விரும்பவில்லை. இதுநாள் வரை எல்லா பயிற்சிகளையும் புடவை அணிந்தே செய்து பழகிவிட்டேன். அதனால் எனக்கு எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. புடவையே உடற்பயிற்சிக்கு சவுகரியமானதுதான் என்று கூறிவிட்டேன். ஜிம்கள் அளவில் நடைபெறும் போட்டிகளிலாவது பங்கேற்குமாறு கூறினார்கள்.

அதற்கு உடை கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதால் புடவை அணிந்தபடியே பளு தூக்கினேன். அதில் பரிசும் பெற்றேன். என்னை பார்த்து என் மருமகள் மணிமொழியும் என்னோடு பயிற்சி பெறுகிறார். எல்லா பயிற்சிகளையும் செய்வதற்கு பழகிவிட்டேன். உடற்பயிற்சி செய்ய தொடங்கியபிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டேன். உடல் எடையும் குறைந்துவிட்டது'' என்று உற்சாகமாகச் சொல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்