பூமியை பாதுகாப்போம்

பூமியைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக ஓசோன் படலம் உள்ளது. இந்த படலம் தான் சூரிய கதிர்கள் பூமியில் நேரடியாக விழாமல் தடுத்து நம்மை பேராபத்தில் இருந்து பாதுகாக்கிறது.;

Update:2022-07-07 21:31 IST

இவை பூமியில் நேரடியாக விழுந்தால் பூமியின் வெப்பநிலை பல மடங்கு உயர்ந்து விடும். அதனால், ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர்மட்டம் உயரும் அபாயமும் உள்ளது.

ஓசோன் படலம்

வளிமண்டலத்தில் பல அடுக்குகள் உள்ளன. அவற்றில் ஒன்று ஸ்ட்ராடோஸ்பியர். இந்த அடுக்கு தரையில் இருந்து 10 முதல் 50 கிலோ மீட்டருக்குள் இருக்கிறது. இந்த அடுக்கின் கீழ் பகுதியில் தான் ஓசோன் படலம் பரவி உள்ளது. மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்து ஓசோன்துகள் ஆகிறது.

சூரியனிடம் இருந்து வரும் ஒளிக்கதிர்களை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக்கதிர்கள் என்று இருவகையாக பிரிக்கலாம். அகச்சிவப்புக் கதிர்கள் சூரியனிடம் இருந்து வரும் வெப்பத்தை பூமிக்கு கொண்டு வருகின்றன. புற ஊதாக்கதிர்கள், தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் தீமையை உண்டாக்குபவை. இவை நேரடியாக பூமியில் விழாதவாறு வடிகட்டி அனுப்புவது தான் ஓசோனின் வேலை.

ஓசோன் பாதிக்கப்படுதல்

வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்கள் மற்றும் குப்பைகள் போன்றவற்றால் காற்று பெருமளவில் மாசுபடுகிறது. காடுகள் அழிக்கப்படுதல், குளிர்சாதனப்பெட்டிகளில் இருந்து வெளிவரும் பிரியான்கள் (குளோரோ புளோரோ கார்பன்) என்ற வாயுக்கள் ஓசோன் படலத்தில் துளையை உண்டாக்குகின்றன. இதனால், சூரியனின் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியை வந்து அடைகிறது. அதனால், வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. துருவப்பிரதேசங்களில் உள்ள பனிக்கட்டி உருகி வெள்ள அபாயம் ஏற்படுகிறது.

ஓசோன் பாதிக்கப்படுவதால், மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், தோல் சுருக்கம், கண்ணில் சதை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற குறைபாடுகளும் உண்டாகின்றன.

அமெரிக்காவில் மழை பெய்து தெருக்களில் தேங்கி நிற்கும் நீரை உடனே சுத்தம் செய்கிறார்கள். நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போடுகிறார்கள். நாமும் இதுபோல் செய்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இருக்கும் இடத்தை நாம் தான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் செய்தால்தான் பூமியை பாதுகாக்க முடியும். நம்மால் முடிந்ததை செய்வோம். பூமியை பாதுகாப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்