சாக்சபோன் இசையில் சாதிக்கும் மங்கைகள் லாவண்யா-சுப்புலட்சுமி

இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் பாடல் பாடுவதில்தான் அதிக ஆர்வம் இருக்கிறது. வெகுசிலரே இசைக் கருவிகளை வாசிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். பலவிதமான இசை வாத்தியங்களை இசைத்துப் பழகி தங்கள் இசைத்திறனை மெருகேற்றிக்கொள்கிறார்கள்.;

Update:2022-08-28 20:30 IST

குறிப்பாக சாக்சபோன் கருவியை வாசிக்கும் பெண்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. இந்த நிலையை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் சிலர் மாற்றி வருகிறார்கள். அவர்கள் சாக்சபோன் இசைக்கருவியை முறைப்படி கற்றுக்கொண்டு திறம்பட வாசித்து பலருடைய கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவர் உடுப்பியை சேர்ந்த பூஜா தேவதிகா. "நான் எட்டாவது வயதில் இருந்தே சாக்சபோன் பயிற்சி பெற்று வருகிறேன். என் தாத்தா சுந்தர் ஷெரிகர் தான் எனக்கு பயிற்சி அளித்தார். 13-வது வயதில் இருந்து நானே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆண்கள் மட்டுமே சாக்சபோன் கருவி வாசிப்பதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதனால் என்னைப் போன்ற பெண் கலைஞர்கள் சாக்சபோன் வாசிப்பதை வியப்பாக பார்க்கிறார்கள். மனதார பாராட்டவும் செய்கிறார்கள். இது எனக்கு புது உத்வேகம் கொடுக்கிறது'' என்றார்.

அடுத்ததாக லாவண்யா மற்றும் சுப்புலட்சுமி ஆகியோரை பற்றி தெரிந்துகொள்வோம். இவ்விருவரும் சகோதரிகள். இவர்கள் இசைக் குடும்ப பின்னணியை கொண்டவர்கள். இவர்களுடைய தாத்தா ராஜப்பா மைசூரு அரசவை இசைக் கலைஞர் ஆவார்.

தந்தை தோல் கருவிகளை வாசிப்பதில் கைதேர்ந்தவர். ஏழ்மையான குடும்பம் என்றாலும் சகோதரிகள் இருவரும் பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத்திடம் பயிற்சி பெற்றனர். ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடமும், பிரபல இசைக் கலைஞர்களுடனும் லாவண்யா பணியாற்றியிருக்கிறார்.

மற்றொருவரான மேகனா சாலிகிராமா சாக்சபோன் இசையில் சிறந்து விளங்குகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தான் வாசிக்கும் வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படி உள்ளன. இதன் காரணமாக இவருடைய பேஸ்புக் பக்கத்தை ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.

பிரபல பயிற்சியாளர் சுந்தர் ஷெரிகர் கூறுகையில் "50 ஆண்டுகளாக சாக்சபோன் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் பயிற்சி பெற ஆர்வம் காட்டுவதை உணரமுடிகிறது. ஆரம்பத்தில் பெரிய இசைக் கருவிகளை பார்த்து அச்சப்படுவார்கள். பின்னர் அதனை வாசிக்க விரைவாக கற்றுக் கொள்கிறார்கள்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்