கின்னஸ் சாதனையாக மாறிய 'பெனால்டி கிக்'
கேரளாவில் பெனால்டி கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.;
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்த போது இவர்கள் ஜெர்மனி, பிரேசில் வீரர்களுக்கு கட்-அவுட் அமைத்துக் கொண்டாடினர். கேரளாவைச் சேர்ந்த வீரர்கள் பலர் தேசிய கால்பந்து அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகிறார்கள். மேலும், கேரளாவில் கால்பந்து போட்டிகள் நடந்தால், ரசிகர்கள் கூட்டம் திரளும். கால்பந்தில் சாதனை படைக்கவும் அவர்கள் அடிக்கடி முயற்சி செய்வது வழக்கம். அந்தவகையில், சமீபத்தில் பெனால்டி கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மஞ்சேரி பையநாடு பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. காலை 7.38 மணிக்கு பெனால்டி கிக் அடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இரவு 7.38 வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், 4,500 பெனால்டிக் கிக்குகள் அடிக்கப்பட்டன. இரவு 7.38 மணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துர்ரஹிமான் பெனால்டி கிக் அடித்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார். பந்தை அமைச்சர் வலைக்குள் சரியாக எட்டி உதைத்ததும், அங்கிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினர்.
கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கொண்ட 50 குழுவினர் இந்த சாதனையில் பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவிலும் 50 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஒவ்வொருவரும் பந்தை பெனால்டி பகுதியை நோக்கி அடிக்க ஆரம்பித்தனர். பந்தை தடுக்க கோல் கீப்பரும் உண்டு. அவரையும் தாண்டி கோல் அடிப்பதுதான், இதன் சுவாரசியம். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களும் உற்சாகமாகப் பந்தை வலைக்குள் எட்டி உதைத்தனர். இதில் கோல் கீப்பரும், நடுவரும் போதிய இடைவெளிக்குப் பிறகு மாற்றப்பட்டனர்.
இந்த உலக சாதனையில் மொத்தம் 3,500 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கு முன்பு ஜெர்மனியில் 2500 பெனால்டி கிக் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் முந்தைய சாதனையை கேரள இளைஞர்கள் முறியடித்து உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.