தற்காப்பு கலையில் அசத்தும் இரட்டையர்கள் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணி

12 வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன்-தங்கைகள். சிறுவயதில் இருந்தே, தற்காப்பு கலையில் பல்வேறு சாதனைகளை படைத்திருப்பவர்கள், சமீபத்தில் மற்றொரு முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறார்கள்.

Update: 2023-01-01 16:21 GMT

அதாவது, கண்களை கட்டிக்கொண்டு பல்வேறு விதமான தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக்காட்டி எல்லோரையும் வியக்க செய்து, பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

''நானும், என் தங்கையும், 3 வயதில் இருந்தே தற்காப்பு கலை பயில்கிறோம். கராத்தே, குங்குபூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், யோகா... இப்படி நிறைய தற்காப்பு சம்பந்தமான கலைகளையும், அதற்கு தேவையான ஆயுத பயிற்சிகளையும் சிறுவயதில் இருந்தே கற்றுக்கொண்டிருக்கிறோம். 5 வயதில் தொடங்கி, இப்போது வரை பல சர்வதேச தற்காப்பு போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறோம். இதுவரை 80 போட்டிகளில் கலந்துகொண்டு, 250 பதக்கங்களை வென்றிருக்கிறோம்'' என்று உற்சாகமாக பேசி, அறிமுகம் செய்து கொள்கிறார், ஸ்ரீவிசாகன். காரைக்கால் பகுதியில் இருக்கும் குட் ஷெப்பர்ட் பள்ளியில், 6-ம் வகுப்பு படித்துக்கொண்டே, இன்றளவும் தற்காப்பு போட்டிகளில் அசத்தி வருகிறார்.

விசாகனை தொடர்ந்து, இரட்டையர்களின் அம்மா பிரியா பேசினார்.

''என் கணவர் முருகானந்தம் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதனால் எங்கள் குழந்தைகள் இருவரையும் விளையாட்டில் ஈடுபட வைத்தோம். ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள். அதனால் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் வளர்க்க நினைத்தோம்.

இருவருமே சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்து முதலில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப முடிவு செய்தோம். அது அவர்களுக்கு சரியாக வரவில்லை. பிறகு கராத்தே பயிற்சிக்கு அனுப்பினோம். அதில் ஈடுபாட்டோடு இருந்தார்கள். மூன்று வயதிலிருந்து கராத்தே பயிற்சிக்குப் போகிறார்கள். சிறு வயதிலேயே இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி யிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பதக்கம், பரிசு என்று வென்று வரும்போது சந்தோசமாக இருக்கும்.

கராத்தே மட்டும் இல்லாமல் என் மகனுக்கு செஸ் விளையாட்டிலும் அதிக ஈடுபாடு உண்டு. என் மகள் ஓவியத்திலும், எழுத்திலும் ஆர்வமாக இருக்கிறாள். என் கணவர் ஆசைப்பட்டதை என் குழந்தைகள் நிறைவேற்றி வைக்கிறார்கள்'' என்றார்.

சாதனை சுட்டிகளின் தந்தை முருகானந்தம் கூறும்போது, ''இவர்கள், சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலையோடுதான் வளர்கிறார்கள். இருப்பினும் இவர்களது படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக கராத்தே பயிற்சிக்கு அனுப்புவதற்கான பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். பள்ளிக்கூடம் அனுப்பும் பொறுப்பை என் மனைவி ஏற்றுக்கொண்டார்.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கராத்தே பயிற்சிக்குப் போவார்கள். இரண்டு மணி நேரம் பயிற்சி முடித்துவிட்டு பிறகு பள்ளிக்கூடம் செல்வார்கள். கராத்தே போட்டிக்காக வெளியூருக்கு அழைத்துச் செல்லும்போது இவர்களுக்கு போட்டியாக வயதில் மூத்தவர்கள் பங்கு பெறுவார்கள். அந்தப்போட்டியிலும் கொஞ்சம்கூட பயமில்லாமல் அசராமல் ஜெயிப்பார்கள். எங்கள் குழந்தைகள் இருவரையும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற வைத்து இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வாங்க வைக்கவேண்டும் என் பதுதான் எங்கள் லட்சியம்'' என்று தளராத தன்னம்பிக்கையோடு தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து, பயிற்சியாளர் மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமார் கூறும்போது... ''13 முதல் 15 வயது நிரம்பியவர்கள் எட்டக்கூடிய 2-ம் பிளாக் பெல்ட் தகுதியை, 10 வயதிற்குள்ளாகவே எட்டிப் பிடித் திருக்கிறார்கள். இப்போது, கண்களை கட்டிக்கொண்டு, பல்வேறு தற்காப்பு கலைகளை நிகழ்த்தி காட்டி, புது சாதனை முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.

சிறு வயதிலேயே இவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைப் பெருமைப் படுத்தும் விதமாக, தற்காப்பு கலைஞர் களுக்கு நன்கு பரீட்சயமான 'வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்' மற்றும் 'வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் சாதனையாளர்களாக பதிவாகி இருக்கிறார்கள்.

'யூனிவர்செல் அச்சூவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' வேல்ட் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் 'பூச்சர்ஸ் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றிலும் இடம்பிடித்திருக்கிறார்கள்'' என்று முடித்தார்.

அண்ணன் விசாகன், தங்கை ஹரிணியிடம் பேசினோம்.

* உங்களது படிப்பு எப்படிப் போகுது?

விசாகன்: ஆப்லைன்-ஆன்லைனில் பயிற்சி இருப்பதால் நல்லா படிக்கிறோம். ஹரிணி: படிப்பு விஷயத்தில் அம்மா மிகக் கண்டிப்பு, நாங்க யோகா செல்வதால் நல்ல நினைவாற்றல் இருக்கிறது. படிப்பில் கவனம் செலுத்துகிறோம்.

* விளையாட நேரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

விசாகன்: இதுவும் ஒரு விளையாட்டுதானே!. கராத்தே, பாக்சிங், சிலம்பம், வாள் சண்டை எல்லாம் விளையாட்டுப் போல ஒரு பொழுதுபோக்காகவும், எனர்ஜியாகவும் இருக்கிறது.

ஹரிணி: கராத்தே ஒரு விளையாட்டாக, பாதுகாப்பாக இருக்கிறது. இன்றைய பெண் குழந்தைகள் கராத்தே கற்பது பலமான பாதுகாப்புக் கவசம். இதைப்புரிந்து என் தோழிகள் தற்காப்புக் கலை கற்கிறார்கள்.

* 'ரிஸ்க்' எடுத்து கராத்தே செய்வதால் உடம்பு வலிக்குமே?

ஹரிணி: தொடர்ச்சியாக பயிற்சி செய்தால் உடம்பு வலிக்காது.

விசாகன்: ஆர்வமில்லாமல் செய்தால் அது வலி தருவதாக, கஷ்டமாகத் தெரியும். எங்களுக்கு அப்படித் தெரியவில்லை.

* உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

விசாகன்: நல்லா படிச்சு ஐ.ஏ.எஸ். ஆகணும். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று கராத்தே, குங்பூவில் ஜெயிக்கணும்.

ஹரிணி: ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கணும். மருத்துவராகி, சேவை செய்யணும்.

* உங்களை ரொம்பவும் ஊக்கப்படுத்துவது யார்?

அம்மா-அப்பா, மாஸ்டர் ஆகியோருக்கு அடுத்தபடியாக, பள்ளியின் தாளாளர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். அவர்களது முயற்சியினால், தேர்வு சமயங்களிலும் சர்வதேச போட்டிகளுக்கு சென்று வந்திருக்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்