கனவை துரத்தும் பயணம்
மருத்துவராக வேண்டும் என்பதுதான் அகமது ஹஜாமின் கனவாக இருக்கிறது. அந்த கனவை துரத்தி பிடிப்பதற்காகவே சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கூடம் வந்து படிப்பை தொடர்வதாக கூறுகிறார்.;
மாணவர் ஒருவர் ஒற்றை காலின் துணையுடன் தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தும், ஓடியும் பள்ளிக்கூடம் சென்று படிக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவி வைரலாகி இருக் கிறது. அந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். அங்குள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் மாவார் கிராமத்தில் பெற்றோருடன் வசிக்கிறார். அவரது பெயர் அகமது ஹஜாம். 14 வயதாகும் இவர் தனது கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்று வர முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் தாமே நடந்து சென்று பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பள்ளி நாட்களில் காலையில் சீருடை அணிந்து, பேக்கை தோளில் சுமந்தபடி நடக்க தொடங்குகிறார். ஒற்றை காலில் வேகமாக பயணிப்பவர் வகுப்பு தொடங்கும் நேரம் நெருங்கிவிட்டால் வேகமாக ஓடவும் செய்கிறார். பள்ளிக்கூடத்திற்குள் சென்ற பிறகும் பிறரை சார்ந்திருப்பதில்லை. தாமே துள்ளிக்குதித்தபடி படிக்கட்டுகளில் ஏறி வகுப்புக்குள் செல்கிறார். சக மாணவர்கள் அவருக்கு உதவி செய்ய முன் வந்தாலும் தன்னால் இயன்றவரை அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கிறார். மருத்துவராக வேண்டும் என்பதுதான் அகமது ஹஜாமின் கனவாக இருக்கிறது. அந்த கனவை துரத்தி பிடிப்பதற்காகவே சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கூடம் வந்து படிப்பை தொடர்வதாக கூறுகிறார்.
தான் நடந்து வரும் பாதை மேடு பள்ளத்துடன் காணப்படுவதாகவும், அதனால் நடப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் சொல்கிறார். ஹஜாம் 2 வயது வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் இருந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்திருக்கிறார். அரசு சார்பில் ஹஜாமுக்கு நான்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் ஊரில் சாலைகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்றும் சொல் கிறார்.
ஹஜாம் பள்ளிக்கு ஒற்றை காலில் செல்லும் வீடியோ வைரலானதை தொடர்ந்து ஜெய்ப்பூரை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று செயற்கை கால் வழங்க முன்வந்திருக்கிறது.