புதுமை உடற்பயிற்சிகளும், விளக்கங்களும்..!

வித்தியாசமான உடற்பயிற்சி முறைகளால், வசீகரிக்கிறார் ஸ்நேகா. காரைக்கால் பகுதியை சேர்ந்தவரான இவர், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் முடித்தவர்.;

Update: 2022-11-06 14:59 GMT

தன்னுடைய கல்லூரி காலத்திலேயே, உடற்பயிற்சியின் மகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, யோகா, ஏரோபிக்ஸ், ஜூம்பா, பிலேட்ஸ், எச்.ஐ.ஐ.டி. போன்ற புதுமையான உடற்பயிற்சி முறைகளை கற்றுக்கொண்டு, அதன்மூலம் பெண்களுக்கு ஏற்ற புதுமையான உடற்பயிற்சி முறைகளை உருவாக்கி, கற்று கொடுக்கிறார். அவரிடம் சிறுநேர்காணல்.

* பெண்களுக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமாகிறது?

ஆண்களை விட, பெண்களுக்கு உடற்பயிற்சி மிக அவசியம். உடல் எடையை காரணம்காட்டி, பெண்மை சம்பந்தமான பல குறைபாடுகளை அடுக்குகிறார்கள். அதனால் திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியமாகிறது.

* உடற்பயிற்சியில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

கல்லூரி காலத்தில் இருந்தே, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள ஆசைப்பட்டேன். அதனால், உடற்பயிற்சி சம்பந்தமாக, புதிதாக நுழையும் உடற்பயிற்சி முறைகளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில், உடற்பயிற்சி முறைகள், அடுத்ததாக யோகா பயிற்சி, ஜூம்பா எனப்படும் நடன உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் பயிற்சி... என அவ்வப்போது டிரெண்டாக இருக்கும் எல்லா உடற்பயிற்சிகளையும் நுணுக்கமாக கற்றுக்கொண்டேன்.

* இப்போது டிரெண்டாக இருக்கும் உடற்பயிற்சி எது?

இப்போது பிலேட்ஸ் மற்றும் எச்.ஐ.ஐ.டி. இவை இரண்டும், பிரபலமாக இருக்கின்றன. எல்லா உடற்பயிற்சிகளும், ஒரே மாதிரியிலான ேதாற்றத்தில்தான் இருக்கும். என்ன கொஞ்சம் வித்தியாசங்களும், புதுமையான செய்முறைகளும் இருக்கும். அவ்வளவுதான் மாறுபாடு. மற்றபடி, எல்லா உடற்பயிற்சிகளும், உடலை அசைக்கவும், வளைத்து, நெளிக்கவுமே வழிகாட்டுகின்றன.

* பிலேட்ஸ் மற்றும் எச்.ஐ.ஐ.டி. பற்றி கொஞ்சம் விளக்குங்கள்?

பில்லாட்டிஸ், பிலேட்ஸ், பைலேட்ஸ் இப்படி மொழிகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த உடற்பயிற்சி, யோகாவை அடிப்படையாகக் கொண்டது. இதில் வரும் எல்லா உடற்பயிற்சிகளும், யோகாசனங்களை போலவே இருக்கும். இதை உடற்பயிற்சியாகவும், விளையாட்டு வீரர்களுக்கான 'வாம் அப்' பயிற்சியாகவும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல ஹை இன்டன்சிட்டி இன்டர்வெல் டிரைனிங் எனப்படும் எச்.ஐ.ஐ.டி. உடற்பயிற்சியானது எந்தவித உடற்பயிற்சி உபகரணங்களும் இல்லாமல், உடல் அசைவுகளை வேகமாக்கி, அதன்மூலம் உடலுக்கு நன்மை தேடிக் கொடுக்கிறது. இதில் எதை செய்தாலும், அதை வேகமாகவே செய்ய வேண்டும். 15 நிமிடம், இந்த பயிற்சியில் ஈடுபட்டால், அந்த நாள் மொத்தத்திற்குமான எனர்ஜி கிடைத்துவிடும்.

* இன்றைய இளைஞர்கள் உடற்பயிற்சியில் ஆர்வமாக இருக்கிறார்களா?

நிச்சயமாக. இளைஞர்களை விட, 30-40 வயதை எட்டியவர்கள்தான், ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார்கள். முன்பை விட, வாழ்க்கை முறை நிறையவே மாறிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே, உழைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறைய பேர் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் உடற்பயிற்சியின் அவசியத்தை, மகத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆர்வமாக உடற்பயிற்சி செய்கிறார்கள்.

* பெண்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி எது?

இன்று, எல்லாமே நவீனமாகிவிட்டது. முன்பெல்லாம், எடை மிகுந்த கருவிகளை தூக்கித்தான் உடற்பயிற்சி செய்ய முடியும். இன்று அப்படியில்லை. உடற்பயிற்சி துறையில் நவீனம் புகுந்துவிட்டது. பெண்களுக்கு ஏற்ப, எடை குறைவான சிறுசிறு பொருட்களை வைத்தே உடற்பயிற்சி செய்யும் முறைகள் நிறைய இருக்கின்றன. பாடலுக்கு ஆடிக்கொண்டே, உடலை குறைக்கும் ஜூம்பா பயிற்சி, அமர்ந்து எழும் லேசான உடற்பயிற்சிகள், பெலாடி, கிராஸ் பிட்... என நிறைய வந்துவிட்டது. இவை பெண்களுக்கு உடல் எடையை குறைப்பதுடன், கர்ப்பப்பை தொடர்பான சில நோய்களையும் குணமாக்குகின்றன.

* உடற்பயிற்சி துறையில் வேறு எதுவும் புதுமையான உடற்பயிற்சி முறைகள் வருமா?

நிச்சயமாக வரும். எல்லா உடற்பயிற்சிக்கும் அடிப்படை ஒன்றுதான். ஆனால் அந்த பயிற்சியை, மக்கள் விரும்பும்படி கொடுப்பதில்தான், புதுமைகள் உருவாகின்றன.

* உடற்பயிற்சியில் நீங்கள் எதுவும் புது ஸ்டைலை உருவாக்கி இருக்கிறீர்களா?

ஆம்..! பெண்கள் உற்சாகமாக உடற்பயிற்சி செய்வதற்காகவே, புதிதாக ஒரு முறையை உருவாக்கி இருக்கிறேன். இதில் எல்லா உடற்பயிற்சிகளும் கலந்திருக்கும். நடைப்பயிற்சி, உடல் அசைவு பயிற்சிகள், கை-கால்களை பலமாக்கும் பயிற்சிகள், வயிற்றுக்கு வடிவம் கொடுக்கும் அசைவுகள்... என பெண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறேன்.

* முயன்று பார்த்தீர்களா?

ஆம்..! ஆன்லைனில், 7 ஆயிரம் பெண்களை ஒருங்கிணைத்து, இந்த புதுமையான உடற்பயிற்சியை முயன்று பார்த்தோம். பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

* உங்களுடைய ஆசை?

பெண்களுக்கான எளிய உடற்பயிற்சி முறையை வடிவமைப்பதே என்னுடைய ஆசை. அதை, எல்லா வயதினரும் பின்பற்ற ஏதுவாக வடிவமைக்க ஆசைப்படுகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்