வானில் ஜாலம் காட்டும் 'ஸ்டார்லிங் பறவைகள்'

உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்த்து வருகின்றன. அதில் பறவைகளும் அடங்கும். பறவைகளில் அழகுகள் நிறைந்தவைகளும், கண்களை கவரக்கூடியவையும் உள்ளன. இதில் நாம் காணப் போவது வானில் ஜாலம் காட்டுவதோடு பல்வேறு வித்தைகளை நிகழ்த்தி வரும் ஸ்டார்லிங் பறவைகள் தான்.;

Update:2022-07-28 21:25 IST

ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் வெப்ப மண்டல பசுபிக் தீவுகள் ஆகியவற்றை தாயகமாக கொண்டு உள்ளவைதான் ஸ்டாலிங் பறவைகள். இவை ஆசியாவில் காணப்படும் மைனாவின் குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இந்த பறவை இனம் வலுவான பாதங்களும், இறக்கைகளையும் கொண்டவை. இவற்றில் ஏராளமான இனங்கள் உள்ளன. அவற்றில் பல இனங்கள் மனித வாழ்விடத்தை சுற்றிலுமே தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொள்கின்றன. ஸ்டார்லிங் பறவைகள் சிறிய வகை பூச்சிகள், சிறிய வகை இறால்களை உணவாக உட்கொள்கின்றன. இந்த பறவைகள் கூட்டமாக மட்டுமே வாழும் தன்மை கொண்டவை ஆகும். எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள எப்போதுமே கூட்டமாகவே மட்டும் வாழும். அதேபோல் வானில் பறக்கும் பொழுது ஒன்றொடொன்று இணைந்தே கூட்டமாகவேத்தான் பறக்கும். இந்த பறவைகளின் குரல் பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. மனிதர்கள் பேசுவது போன்ற குரல் அமைப்பு, கார் ஹாரன் சத்தம் போன்று இவை ஒலி எழுப்பி அனைவரின் கவனத்தையும் சிதறல் செய்யும் தன்மை கொண்டவை.

ஒரு இடத்தில் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணரும் பட்சத்தில் இந்த பறவைகள் ஒரே நேரத்தில் மரங்களில் இருந்து வானில் எழும்பி பறந்து பல்வேறு சாகசங்களை செய்து வருகிறது. தங்களை தாக்க முடியாத அளவுக்கு ஒன்று சேர்ந்து வானில் ஒரு பெரிய உருவத்தை காட்டியபடி பறக்கும். எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக மட்டுமின்றி, இரவு நேரங்களில் தங்களை கதகதப்பாக வைத்துக் கொள்வதற்காகவும் ஸ்டார்லிங் பறவைகள் இவ்வாறு பறக்கின்றன. குறிப்பாக குளிர்காலங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் நெருக்கமாகவே பறக்கும். ஏனென்றால் அப்போதுதான் அவற்றின் உடல்சூடு அந்த பறவைகளை கதகதப்பாகவே வைத்திருக்கின்றது. ஐரோப்பா பகுதிகளில் குளிர்காலங்களில் இந்த பறவை கூட்டங்களின் அதிசய வடிவங்களை காண்பது என்பதே அங்குள்ள மக்களின் பொழுது போக்காகவும் இருக்கிறது.

ஸ்டார்லிங் பறவைகள் இப்படி கூட்டமாக ஒன்று சேர்ந்து வெவ்வேறு வடிவங்களில் பறப்பதற்கு எந்த பயிற்சியும் பெறுவதில்லை. இந்த பறவைகளை வழிநடத்த எந்த தலைமையும் கிடையாது. எந்த பறவை வேண்டுமானாலும் திசையை மாற்ற ஆரம்பிக்கலாம். எந்த ஒரு பறவையும் தனக்கு அருகில் உள்ள 7 பறவைகளின் அசைவுகளை பார்த்தே தானும் அது போன்றே பறக்கிறது. தனக்கு ஆபத்து என்று உணரும் எந்தவொரு பறவையும் பறக்கும் திசையை மாற்றும். இது அதன் அருகில் உள்ள பறவைகள் மீது ஆதிக்கம் செலுத்தும். அது அதற்கு அருகிலுள்ள பறவைகள் என முழுமையான கூட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த பறவைகள் கடல் அலையை போன்று வளைந்தும், நெளிந்தும் பறப்பதற்கு அவற்றுக்குள் நடக்கும் திசை மாறுதல்களே காரணம். இந்த பறவைகள் தற்போது இந்தியாவில் ஒருசில இடங்களிலும் காணமுடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்