துளி துளியாய் மழை
மழை எப்படி உருவாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா..? இதோ மழை பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆலங்கட்டி மழை எப்படி உருவாகும்?
சாதாரண மழைக்கு எப்படி மேகங்களில் நீர் துளிகள் சேர்த்து வைக்கப்படுகிறதோ அதேபோல் தான் ஆலங்கட்டிமழைக்கும் மேகங்களில் நீர் சேர்த்து வைக்கப்படும். ஆனால் அதிக குளிர்ச்சியின் காரணமாக மழை மேகத்தின் கீழ்பகுதியில் நீராகவும், மேல்பகுதியில் பனிக்கட்டியாகவும் மாறி ஆலங்கட்டி மழையை உருவாக்குகிறது.
* எப்படி உருவாகிறது?
வானில் இருக்கும் மேகங்கள்தான், மழை உருவாக முக்கிய காரணம். நம் பூமியில் உள்ள நீரை சூரியன் தனது வெப்பத்தினால் ஆவியாக்கும். அதாவது நம் பூமியில் உள்ள நிலத்தடி மற்றும் ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் உள்ள நீரை சூரியன் தனது வெப்பத்தினால் நீராவியாக்கி, சிறு சிறு துளிகளாக மேகங்களில் சேர்த்து கொள்கிறது. இவ்வாறான மேகங்களே, நமக்கு மழையை தருகிறது.
* ஒரே நேரத்தில், எல்லா இடங்களிலும் மழை பெய்யுமா?
நாம் சில நேரங்களில் கவனித்திருக்கலாம். ஒரு இடத்தில் மழை பொழியும்போது வேறொரு இடத்தில் மழை பொழியாது. இதனை நீங்கள் பேருந்தில் செல்லும்போது கவனித்திருக்கலாம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்றால் எல்லா மேகங்களிலும் நீர் சேர்த்து வைக்கப்படுவதில்லை. நீர் சேர்த்துவைக்கப்படும் மேகங்கள் மட்டுமே நமக்கு மழையை தருகிறது. இவ்வாறு எல்லா இடத்திலும் நீர் மேகம் இல்லாததால் அங்கெல்லாம் மழை பொழிவதில்லை.
* அமில மழை
சாதாரண மழை எவ்வாறு உருவாகிறதோ அதேபோல் தான் இந்த அமில மழையும். ஆனால் எப்படி அமில மழையாக பொழிகிறது என்று கேள்வி வரலாம். இந்த அமில மழை கிராமங்களில் பொழிவதில்லை. நகர்புறங்களில்தான் பெரும்பாலும் பொழிகிறது. இதற்கு அங்குள்ள மாசடைந்த காற்றுதான் காரணம். ஏனென்றால் நீர் நீராவியாக மாறும்போது சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களையும் தன்னுள் நீராவியாக எடுத்துச்சென்று மேகங்களில் சேர்த்துவைக்கும். அது மாசுகளுடன் இணைந்து அமிலமாக மாறும். இவ்வாறு அமிலமாக மாறும் மேகம் அதே இடம் அல்லது மேகம் நகர்ந்து சென்று வேறொரு இடத்தில் கூட மழையாக பொழியலாம்.