சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு; காவல்துறை கண்டுகொள்ளுமா? என்ற ஏக்கத்தில் சாமானியர்கள்

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், சென்னையில் பெட்ரோல் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறை கண்டுகொண்டு உரிய பாதுகாப்பு அளிக்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் உள்ளனர்.;

Update:2022-10-04 16:09 IST

பார்க்கிங் வசதியின்மை

தற்போதைய வாழ்வியல் முறையில், நடுத்தர மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அத்தியாவசிய போக்குவரத்து சாதனமாக மோட்டார் சைக்கிள் மாறி உள்ளது என்றால் அது மிகை அல்ல.

தமிழகத்தின் தலைநகராகவும், தொழில் நகரமாகவும், வந்தாரை வாழ வைக்கும் நகரமாகவும் திகழும் சென்னையில் பிழைப்பு தேடி வந்துள்ள சாமானிய மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர்.

மக்கள் தொகை நெருக்கடி காரணமாக சென்னையில் கட்டப்படும் வீடுகள் பெரும்பாலும் வாகன பாதுகாப்பு இடவசதி (பார்க்கிங் வசதி) இல்லாமலே கட்டப்படுகிறது. குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட போதுமான பார்க்கிங் வசதி இருப்பது இல்லை. இது போக, வேலைவாய்ப்பு தேடி சென்னை வரும் இளைஞர்கள் தங்கி பணிக்கு செல்வதற்காக ஆங்காங்கே இருக்கும் தங்கும் விடுதிகளும் போதுமான பார்க்கிங் வசதி இல்லாமலே செயல்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் வயிற்று பிழைப்புக்காக சென்னையை தேடி ஓடி வரும் சாமானிய மக்கள் குறைந்த வாடகையில் தாங்கள் தங்குவதற்கு ஒரு சிறிய இடமாவது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கிடைத்த வீடு அல்லது விடுதியில் தங்குகின்றனர்.

தெருக்கள், சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள்

இவ்வாறு தங்கும் சாமானிய மக்கள் தங்கள் வேலைக்காக சில, பல கிலோ மீட்டர் தொலைவிற்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு தாங்கள் வேலைபார்க்கும் இடங்களுக்கு சென்று வருகின்றனர். வேலைக்கு சென்று வீடு திரும்பும் இந்த மக்கள் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் தங்கள் மோட்டார் சைக்கிள்களை இரவு நேரத்தில், தெருக்கள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் நிறுத்தி வைக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போதைய விலை உயர்வால் திரவத் தங்கமாக மாறிவிட்ட பெட்ரோலின் தேவையும் இத்தகைய மக்களுக்கு பெரும் சுமையாகவே இருந்து வருகிறது. எனினும், தங்களின் அன்றாட வாழ்விற்கான உணவுக்கு செலவழிக்கும் தொகைக்கு இணையான அளவுக்கு பெட்ரோலுக்கும் பணத்தை செலவழிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வேறு வழியின்றி எப்பாடு பட்டாவது, தாங்கள் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளுக்கு தேவையான பெட்ரோலை போட்டு வருகின்றனர்.

பெட்ரோல் திருட்டு

திரவத் தங்கமான பெட்ரோலின் விண்ணை முட்டும் விலை உயர்வு காரணமாக திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம்பெற்றுவிட்டது என்றால் அதுவும் மிகை அல்ல. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, மற்ற பொருட்களை திருடுவதை விட பெட்ரோல் திருடி தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு திருடர்கள் வந்துவிட்டனர். இதனால், சென்னையில் சாலை ஓரங்கள், தெருக்களில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களில் நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் பெட்ரோலை திருடிச் செல்கின்றனர்.

தங்கள் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடப்பட்டது தெரியாமல், காலையில் அவசர, அவசரமாக வேலைக்கு செல்லும் சாமானிய மக்கள் புறப்பட சிறிது தூர பயணத்திலேயே பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நிற்கும் மோட்டார் சைக்கிளால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் திருடும் திருடர்களை கையும், களவுமாக பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமாகவே முன்வர வேண்டும் என்று சாமானிய மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

போலீசார் மோட்டார் சைக்கிளில் ரோந்து

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''பெட்ரோல் திருட்டு குறித்து புகார்கள் எதுவும் வருவது இல்லை. வேறு வழக்குகள் காரணமாக சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்யும்போது சில பெட்ரோல் திருடர்களும் மாட்டுவார்கள். நள்ளிரவு நேரத்தில் போலீசார் மோட்டார் சைக்கிளில் குறுகலான தெருக்களிலில் ரோந்து செல்வதன் மூலமே பொதுமக்கள் எதிர்பார்க்கும் இந்த பெட்ரோல் திருட்டை தடுக்க முடியும். இதற்காக தமிழக அரசு மோட்டார் சைக்கிளை வழங்கி உள்ள போதிலும், போதுமான காவலர்கள் இன்மையால் அந்த பணி தற்போது நடைபெறாமல் உள்ளது. எனவே, போதுமான அளவிற்கு போலீசார் இருந்தால் பெட்ரோல் திருட்டை தடுக்கலாம்'' என்று தெரிவித்தார்.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திண்டுக்கல் பூட்டு போட்டாலும் பெட்ரோல் திருட்டை நிறுத்த முடியாது

பெட்ரோல் திருட்டு குறித்து சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த மெக்கானிக் மகியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ள இளைஞர் சமுதாயம் பெட்ரோல் திருட்டு போன்றவற்றிற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் கண்களுக்கு போதையை தவிர வேறு எதுவும் தெரிவது இல்லை. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் சென்றுவிடுகின்றனர்.

பொதுவாக கார்ப்பரேட்டர் முறையிலான மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோலை திருடுவது எளிது. பெட்ரோல் டியூப்பை உருவி பாட்டிலில் வைத்து பெட்ரோலை திருடலாம். ஸ்கூட்டி வகையிலான மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோல் டேங்க் வெளியில் தெரியாததால் பெட்ரோல் திருடுவது சிரமம் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் பெட்ரோல் திருடர்கள் அதிலும் எளிமையாக பெட்ரோலை திருடி விடுவார்கள்.

தற்போது தயாரிக்கப்படும் பி.எஸ்.-6 ரக மோட்டார் சைக்கிள்களில் கார்ப்பரேட்டர் முறை இல்லாததால் பெட்ரோல் திருடுவது கடினம் என்றும் சிலர் நினைப்பார்கள். ஆனால், அதிலும் நுட்பமாக பெட்ரோல் திருடும் திருடர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் பெட்ரோல் டேங்கிற்கு பூட்டு வாங்கி மாட்டினால் திருட்டை தடுக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், திண்டுக்கல் பூட்டை வாங்கி போட்டாலும் பெட்ரோல் திருடர்கள் நினைத்தால் திருடி விடுவார்கள்.

எனினும், பி.எஸ்.-6 ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பூட்டு போடப்பட்ட பெட்ரோல் டேங்குகளில் இருந்து பெட்ரோலை மிகவும் எளிதாக திருடமுடியாது. எனவே, மக்கள் இவற்றை பயன்படுத்தலாம். இருப்பினும் போலீசாரின் உரிய நடவடிக்கைகள் மூலம் மட்டுமே பெட்ரோல் திருட்டை கட்டுப்படுத்த முடியும். போலீசார் என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும் திருடனாய் பார்த்து திருந்தாதவரை பெட்ரோல் திருட்டை முழுமையாக தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெட்ரோல் திருட்டு குறித்து சாமானிய மக்களின் கருத்துகள்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த எம்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் பெட்ரோல் திருட்டு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் பெட்ரோல் விலையேற்றம் தான். கடந்த மார்ச் 8-ந் தேதி கச்சா எண்ணெய் விலை 120 டாலராக இருந்த போது பெட்ரோல் விலை ரூ.101.40 ஆக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 82 டாலராக குறைந்த போதிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை தற்போது விலை வீழ்ச்சி அடைந்த பிறகும் குறைக்கப்படவில்லை.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக திருட்டுத் தொழில் செய்பவர்கள் பெட்ரோலை திருட தொடங்கி உள்ளனர். பெட்ரோல் விலை குறைந்தால் திருடர்கள் வேறுபக்கம் திரும்புவார்கள். மக்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, பெட்ரோல் விலையை குறைக்க தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை திருவள்ளுவர்புரத்தை சேர்ந்த கே.மனோஜ் என்பவர் கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் கஞ்சா, மது போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த போதைக்கு அடிமையானவர்கள் தங்களிடம் பணம் இல்லாத போதும், போதையின்றி இருக்க விரும்புவது இல்லை. எனவே, எங்காவது, எதையாவது திருடி போதைப்பொருளை வாங்குவதில் குறியாக இருக்கின்றனர்.

அவர்களுக்கு மிகவும் எளிமையான ஒன்றாக பெட்ரோல் திருட்டு அமைந்துள்ளது. எனவே, மக்கள் மிகவும் அயர்ந்து தூங்கும் நள்ளிரவு 1 மணி முதல் 3 மணி வரையிலான நேரத்தில் பெரும்பாலான பெட்ரோல் திருட்டுகள் நடைபெறுகிறது. இதற்காக மக்களும் தூங்காமல் விழித்து இருக்க முடியாது. எனவே, இந்த பெட்ரோல் திருட்டை தடுக்க போலீசார் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த விமல் என்பவர் கூறியதாவது:-

வசதி படைத்த இளைஞர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த நடுத்தர வசதி படைத்த இளைஞர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக தவணைத் திட்டத்தில் எப்படியாவது விலை உயர்ந்த பெரிய ரக மோட்டார் சைக்கிள்களை வாங்கிவிடுகின்றனர்.

இத்தகைய மோட்டார் சைக்கிள்களில், காதலிகளை அழைத்துக் கொண்டு காத தூரம் பயணிக்க விரும்பும் கட்டிளம் காளையர்களுக்கு அதற்கான பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் பெட்ரோல் விலை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிவிடுகிறது. இதனால், ஒரு சில இளைஞர்கள் நேரடியாக பெட்ரோல் திருட்டில் இறங்கி விடுகின்றனர். சிலர், பெட்ரோல் திருடர்களை அணுகி குறைந்த விலைக்கு பெட்ரோலை வாங்கிக்கொள்கின்றனர். இதனால், எங்கள் பகுதியில் பெட்ரோல் திருட்டு அதிக அளவில் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்