விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவையொட்டி இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் என்று குறிப்பிடுவது ஏன்..?

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2022-08-15 11:05 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, கடந்த ஓராண்டாக அம்ரித் மகோத்சவ் என்ற பெயரிலான இந்திய சுதந்திர அமுதப்பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு, தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்து ஓராண்டு காலம் ஆனதை கொண்டாடும் விதமாக, ஆகஸ்ட் 15, 1948இல் தேசியக்கொடி ஏற்றப்பட்டு முதல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது என பலர் கூறுகின்றனர்.

அப்படி கணக்கிட்டால், நாம் இன்று கொண்டாடுவது நாட்டின் 75வது சுதந்திர தின விழாவாகும். அதில் தவறில்லை.

ஆனால் இதுவரை சுதந்திர தினத்தை எத்தனை ஆண்டுகள், நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடியுள்ளோம் என்று கணக்கிட்டு பார்த்தால் இப்போது நாம் கொண்டாடுவது இந்தியாவின் 76வது சுதந்திர தின விழாவாகும்.

ஏனெனில், 200 ஆண்டுகளுக்கும் மேலான ஆங்கிலேய ஆட்சியில் இருந்து இந்தியா அரும்பாடுபட்டு விடுதலை அடைந்ததை முதன்முறையாக ஆகஸ்ட் 15, 1947இல் மக்கள் கொண்டாடினர் என்பதே உண்மை. அப்படி பார்த்தால் இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுவது சரியே.

இதை சரியாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஆண்டு நாம் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் விதமாக, மார்ச் 12, 2021இல் விடுதலை அமிர்தப் பெருவிழா கொண்டாட்டம்(ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்) ஆரம்பிக்கப்பட்டது. அதாவது 75 வார கால கொண்டாட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறுகிறது.

அதை சிறப்பிக்கும் பொருட்டு இல்லந்தோறும் மூவண்ணக்கொடி ஏற்றுமாறு பிரதமர் உட்பட பல தலைவர்கள் மக்களை கேட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்