சமூக வலைதளங்களில், 'கோடிங்' கற்றுக்கொடுப்பவர்
ராகேஷ் யூ-டியூப் வீடியோக்களின் மூலம் மென்பொருள் விளக்கப் பாடம் நடத்துகிறார்.;
ஐ.டி. நிறுவன பணிகளில் சேர, மென்பொருள் அறிவும், மென்பொருள் உருவாக்க கோடிங் திறனும் அவசியம். பொறியியல் கல்லூரிகளில் இவை கற்றுத்தரப்படுகின்றன என்றாலும், தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் பணம் செலுத்தி படிக்கலாம். ஆனால் சமீபகாலமாக யூ-டியூப் வீடியோக்கள் மூலமாகவும் `சாப்ட்வேர் கோடிங்' கற்றுத்தரப்படுகிறது. குறிப்பாக `புரோகிராமிங் லைன்' என்ற யூ-டியூப் சேனலில் ஐ.டி.வேலைகளுக்கு தேவையான மென்பொருள் மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்த முயற்சியை முன்னெடுத்தவர், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ராகேஷ். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் படிப்பை, 12-வது தரவரிசையில் (ரேங்க்) நிறைவு செய்தவர். இவரே யூ-டியூப் வீடியோக்களின் மூலம் மென்பொருள் விளக்கப் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் பேசினோம்.
* எப்படி தோன்றியது இந்த யோசனை?
கல்லூரி படிக்கும்போதே, சக நண்பர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் மென்பொருள் பாடம் நடத்துவது வழக்கம். மென்பொருள் சார்ந்த பாடத்தில் புரியாத விஷயங்களையும், புரிந்து கொள்ள கடினமான மென்பொருள் மொழிகளையும் தமிழ் மொழியிலேயே வெகுசுலபமாக கற்றுக்கொடுப்பேன். கல்லூரியில் உருவான பழக்கம், கல்லூரி படிப்புக்கு பிறகும் தொடர்ந்தது.
* யூ-டியூப் சேனலில் கற்றுக்கொடுக்கும் ஆசை வந்தது எப்படி?
பொறியியல் பட்டம் பெற்றதும், தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளர் பணியில் சேர்ந்தேன். கல்லூரியில் மென்பொருள் பாடம் படித்ததற்கும், பணியாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அதேபோல, நான் புரிந்து கொண்ட மென்பொருள் மொழிகளை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆவலாக இருந்தேன். அப்படி உருவானதுதான், `புரோகிராமிங் லைன்' (programming line) யூ-டியூப் சேனல். என் பூர்வீகம் ஆந்திரா என்பதால், தொடக்கத்தில் தெலுங்கு மொழியில் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் தெலுங்கை விட தமிழ் மொழியே அதிகமானவர்களை சென்றடையும் என்று தோன்றியது. அதனால்தான் தமிழ் மொழியில் மென்பொருள் மொழிகளை யூ-டியூப்பில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நினைத்தது போலவே, இலங்கை தமிழர்களும் அதிகம் தேடி பார்க்கிறார்கள். மென்பொருள் பயில்கிறார்கள்.
* என்னென்ன மென்பொருள் மொழிகளை கற்றுக்கொடுக்கிறீர்கள்?
ஊப்ஸ், சி, சி++, ஜாவா, பைத்தான், ஆண்ட்ராய்டு, மைஸ்குல், செலனியம், ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல். என 12-க்கும் மேற்பட்ட மென்பொருள் மொழிகளை யூ-டியூப் வீடியோ வழியாக கற்றுக்கொடுக்கிறேன். இவை மட்டுமின்றி, ஐ.டி.துறையில் அப்டேட்டாகும் புது மென்பொருள் மொழிகளையும் உடனுக்குடன் யூ-டியூப் வீடியோவாக மாற்றி பதிவேற்றுகிறேன்.
* மொத்தம் எத்தனை வீடியோக்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?
2017-ம் ஆண்டில் இருந்துதான், யூ-டியூப் பாடம் நடத்துகிறேன் என்றாலும், ஆயிரத்திற்கும் அதிகமாக வீடியோக்களை உருவாக்கி, யூ-டியூப்பில் பதிவேற்றி இருக்கிறேன். ஒவ்வொரு வீடியோவும் ஏதாவது ஒருவகையில், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மாணவனுக்கு பயன்படும்.
* மென்பொருள் மொழிகள் தவிர்த்து வேறு ஏதும் கற்றுக்கொடுக்கிறீர்களா?
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐ.டி.துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும், அதற்கு என்ன மென்பொருள் மொழி (சாப்ட்வேர் லேங்குவேஜ்) தெரிந்திருக்க வேண்டும் என்பது பற்றியும், யூ-டியூப் சேனலில் வீடியோவாக உருவாக்கி, வெளியிட்டிருக்கிறேன். கல்லூரியில் மென்பொருள் பாடம் படிப்பதற்கும், அதில் வேலை பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம், ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்க எந்தளவில் மென்பொருள் மொழி புரிதல் இருக்கவேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை விளக்கி கூறி இருக்கிறேன். மேலும் ஐ.டி. துறையில் வேலைக்கு சேர எந்த வகையில் தயாராகவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கிறேன்.
* முழுமையான பாடம் இருக்கிறதா?
ஆம்..! ஜாவா, சி++ என்றால், அதுபற்றிய அறிமுக விளக்கம், முழுமையான தகவல்கள், எப்படி உபயோகிப்பது, அதில் எப்படி வேலை செய்வது... என பல விஷயங்களை விளக்கி இருக்கிறேன். இதனால் மென்பொருள் துறைக்கு அறிமுகமில்லாத நபர்கள் கூட, மென்பொருள் மொழிகளை பற்றி தெரிந்து கொள்ளமுடியும். முழு முனைப்புடன் பயின்றால், அதில் தேர்ச்சி பெற்று, ஐ.டி.துறையில் பணி பெற முடியும்.
* ஐ.டி.துறைக்கு தேவைப்படும் புதுப்புது மென்பொருள் மொழிகளை எப்படி கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுக்கிறீர்கள்?
எனக்கு 5 மொழிகள் தெரியும். அதை கற்றுக்கொடுத்தபோது, புதுப்புது மென்பொருள் மொழிகளை கற்றுக்கொடுக்கும்படி, இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் ஆர்வத்தை எந்தவகையிலும் குறைத்துவிடக்கூடாது என்பதற்காக, என்னுடன் பணியாற்றுபவர்கள், எனக்கு நெருக்கமான பேராசிரியர்கள், அலுவலக மேலதிகாரிகள் போன்றோர்களுடன் இணைந்து, புதுப்புது மென்பொருள் மொழிகள் பற்றிய வீடியோ பாடம் தயாரிக்கிறேன். ஒருசில மொழிகளுக்கு, என் சொந்த பணத்தை செலவழித்து, யூ-டியூப் பாடம் உருவாக்கினேன்.
புதுப்புது மென்பொருள் மொழிகளை கற்றுக்கொடுக்கும்படி, இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் ஆர்வத்தை எந்தவகையிலும் குறைத்துவிடக்கூடாது என்பதற்காக, என்னுடன் பணியாற்றுபவர்கள், எனக்கு நெருக்கமான பேராசிரியர்கள், அலுவலக மேலதிகாரிகள் போன்றோர்களுடன் இணைந்து, புதுப்புது மென்பொருள் மொழிகள் பற்றிய வீடியோ பாடம் தயாரிக்கிறேன்.