விவசாயி உருவாக்கிய 'புல்லட் டிராக்டர்'

விவசாயத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் மூலம் வேளாண் உற்பத்தியைப் பெருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Update: 2022-12-03 06:19 GMT

ஐதராபாத்,

விவசாயத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் மூலம் வேளாண் உற்பத்தியைப் பெருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக, தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வேளாண் செலவை மிச்சப்படுத்தும் வகையில் புல்லட் வாகனத்தை டிராக்டர் போன்று மாற்றி வடிவமைத்து பயன்படுத்துகிறார். இவரது முயற்சிக்கு பலரது பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

* செலவு அதிகம்

விவசாய பணிகளை எளிதாக்கும் புதிய கருவிகள் வந்து கொண்டே இருந்தாலும், அதை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கியோ அல்லது அதிக வாடகை கொடுத்து வாங்கியோ பயன்படுத்த வேண்டிய நிலையில், விவசாயிகளால் போதிய லாபத்தை பெற முடியவில்லை. இந்த நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புல்லட் டிராக்டரை வடிவமைத்து அதை உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தி வருகிறார்.

* யார் அவர்

நல்கொண்டா மாவட்டம் ரசூல் புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான இந்திரா ரெட்டி, 5 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை பார்வையிட்டார். அங்கு புல்லட்டை டிராக்டராக மாற்றி விவசாயத்திற்குப் பயன்படுத்தும் இயந்திரம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது அவரை ஈர்த்தது.

இதேபோன்று தானும் ஒரு டிராக்டரை வடிவமைக்க வேண்டும் என்று முடிவு செய்த அவர் அதன்படி, பழைய புல்லட்டுக்கு, இரண்டு பக்கமும் பெரிய சக்கரங்களைப் பொருத்தி அதை மினி டிராக்டராக மாற்றினார்.

புல்லட்டின் பாடி, ஆட்டோவின் எஞ்சின், டிராக்டரின் சக்கரங்கள் என மூன்றையும் பயன்படுத்தி இந்த இயந்திரத்தை அவர் வடிவமைத்து இருக்கிறார்.

* எளிமை

இதைக் கொண்டு, நிலத்தை உழுதல், விதை விதைத்தல், மருந்து தெளித்தல், களை பறித்தல் மற்றும் அறுவடைப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த வாகனம் குறித்து பேசிய இந்திரா ரெட்டி ''ஒரு ஏக்கர் நிலத்தை உழ ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே இந்த வாகனத்திற்கு தேவைப்படுகிறது. டிராக்டரை வாடகைக்கு எடுத்தால் சுமார் ஆயிரம் ரூபாய் செலவாகும்.

நிலத்தில் இருந்து மூட்டைகளை வீட்டிற்கு கொண்டு வரவும் இந்த வாகனம் பயன்படுகிறது. வேலை இல்லாதபோது புல்லட் டிராக்டரை உள்ளூர் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடுவதால், அதிலும் வருமானம் கிடைக்கிறது'' என்கிறார்.

* அதிக திறன்

ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே புல்லட் டிராக்டருக்கு தேவைப்படுகிறது. மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் இது பயணிக்கிறது. ஒரு டன் அளவு பாரத்தை இழுத்துச் செல்லும் திறன் வாய்ந்தது. விவசாயி இந்திரா ரெட்டியின் இந்த முயற்சி அவருக்கு மட்டுமின்றி, கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயன் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கொண்டு, நிலத்தை உழுதல், விதை விதைத்தல், மருந்து தெளித்தல், களை பறித்தல் மற்றும் அறுவடைப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்