வெளிநாட்டினரை வியக்க வைக்கும் தமிழக புராதன இடங்கள்

2021-2022-ம் ஆண்டில் இந்தியாவில் வெளிநாட்டவரால் பார்வையிடப்பட்ட முதல் 10 இடங்களில் 6 இடங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அத்தகைய இடங்கள் பற்றியும், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்ப்போம்.

Update: 2022-10-25 13:24 GMT

மாமல்லபுரம் : இது 40 வகையான பண்டைய நினைவு சின்னங்களின் தொகுப்பாக பிரமிக்கவைக்கும் கட்டிடக்கலை அம்சங்களை கொண்டது. குடைவரை கோவில்கள், ரதங்கள், புடைப்பு சிற்பங்கள் என மாறுபட்ட கட்டிடக்கலை நுட்பங்கள் ஒரு சேர அமைந்திருக்கும் சிறப்புக்குரியது. 1984-ம் ஆண்டு இதனை யுனஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினரின் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2021-22-ம் ஆண்டில் வெளிநாட்டினர் பார்வையிட்ட 10 இடங்களில் மாமல்லபுரம் முதலிடம் பிடித்திருக்கிறது. 1 லட்சத்து 44 ஆயிரத்து 984 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக உலக அதிசயமான தாஜ்மஹாலை 38 ஆயிரத்து 922 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள்.

செஞ்சி கோட்டை :விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை, நாட்டின் பிற பகுதிகளை ஆண்ட மன்னர்கள் முதல் இறுதியில் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள் வரை வியந்து போற்றும் அளவுக்கு விளங்கி இருக்கிறது. மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள், 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்கள் என முக்கோண வடிவத்தில் இயற்கை அமைத்து கொடுத்த அரண் போல் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

இந்த கோட்டையை வெளிநாட்டினர் 10 ஆயிரத்து 483 பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். இது அவர்கள் பார்வையிட்ட 10 இடங்களில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. 4-வது இடத்தை பிடித்திருக்கும் ஆக்ரா கோட்டைக்கு வெளிநாட்டினர் 13 ஆயிரத்து 598 பேர் சென்றிருக்கிறார்கள்.

திருமயம் கோட்டை : இது வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோட்டையாகும். சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. புதுக்கோட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்கள் இன்றளவும் தென்படுகின்றன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டியலில் 8-வது இடம் பிடித்திருக்கும் இந்த கோட்டையை வெளிநாட்டவர்கள் 8,422 பேர் பார்வையிட்டுள்ளனர்.

சாளுவன்குப்பம் புலி குகை : மாமல்லபுரத்திற்கு அருகே சாளுவன்குப்பம் என்ற கிராமத்தில் இது அமைந்துள்ளது. புலி குடைவரை, புலி குகை என்று அழைக்கப்பட்டாலும் இங்கு புலி சிற்பங்கள் எதுவும் இல்லை. கடற்கரையையொட்டி அமைந்துள்ள பாறையை குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் மண்டபம் போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. அதற்குள் செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை சுற்றி 11 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த புலி குகையை பார்வையிட்ட வெளிநாட்டினரின் எண்ணிக்கை 25, 579. தமிழர்களே அதிகம் அறிந்திராத இந்த இடத்தை வெளிநாட்டினர் அதிகம் பேர் பார்வையிட்டிருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்தான். வெளிநாட்டவர் பார்வையிட்ட 10 இடங்களில் தாஜ்மஹாலுக்கு அடுத்தபடியாக இது 3-வது இடத்தை பிடித்துள்ளது.

சித்தன்ன வாசல் : புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்ன வாசல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் குடைவரை ஓவியங்கள் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை என்பது சிறப்பம்சம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் அஜந்தா குகை ஓவியங்களை போலவே இவையும் தனிச்சிறப்பு பெற்றவை. இங்குள்ள பாறைகளில் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

இது வெளிநாட்டவர்கள் பார்வையிட்ட பட்டியலில் 10-வது இடத்தை (5,432 பேர்) பிடித்துள்ளது. 7-வது இடத்தில் குதுப்மினாரும் (8,456 பேர்), 9-வது இடத்தில் டெல்லி செங்கோட்டையும் (5,579 பேர்) உள்ளன.

வட்டக்கோட்டை : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையோரம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை வெளிநாட்டினர் பார்வையிட்ட பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கோட்டையின் அழகை வெளிநாட்டினர் 9 ஆயிரத்து 174 பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர்.

நான்குபுறமும் உள்கோட்டை, தூண்களுடன் கூடிய மண்டபம் என வட்ட வடிவில் அமைந்திருப்பதால் வட்டக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. 3.5 ஏக்கர் பரப்பளவுள்ள மதில் சுவர்கள் 29 அடி உயரம் கொண்டது. அன்றைய குமரி துறைமுகத்தின் பாதுகாப்பு அரணாக இந்த கோட்டை விளங்கி இருக்கிறது. இங்கு படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்