'கெட்டில் பெல்' சாம்பியன்

‘கெட்டில் பெல்' என்ற புதுமையான பளு தூக்கும் போட்டியில், சர்வதேச அளவில் தங்கம் வென்று அசத்தியிருக்கும், கேஷ்னி ராஜேஷுடன் சிறுநேர்காணல்...;

Update:2022-11-13 21:24 IST

* உங்களை பற்றி சிறு அறிமுகம்?

மதுரை எங்களது பூர்வீகம். அங்கு சின்ன சொக்கிக்குளம் பகுதியில், அப்பா ராஜேஷ் மற்றும் அம்மா தீபா ஆகியோருடன் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டு பி.காம் முடித்துவிட்டு, இப்போது ஆடிட்டிங் துறையில் பணியாற்றுகிறேன்.

* அது என்ன 'கெட்டில் பெல்' பளு தூக்குதல்?

பளு தூக்கும் போட்டிகளில் பலவகை உண்டு. அதில் இது புதுமையான விளையாட்டு. வழக்கமான இரும்பு ராடு, வட்ட வடிவிலான வெயிட் பிளேட் இவற்றை நெஞ்சுக்கு மேலாக தூக்குவதற்கு பதிலாக, கைப்பிடி கொண்ட பெரிய இரும்பு குண்டுகளை தூக்க வேண்டும். பத்து பத்து கிலோவாக எடையை பிரித்து, இரண்டு கைகளில் இரண்டு இரும்பு குண்டுகளை தூக்கலாம். இல்லையேல், 20 கிலோ எடை கொண்ட, ஒரே இரும்பு குண்டை, இரு கைகள் ஒருசேர தூக்கலாம்.

'கெட்டில் பெல்' என்பது, ரஷிய ராணுவ படையில் கடைப்பிடிக்கப்படும், பயிற்சி முறை. உடலின் வலிமையை, இந்த 'கெட்டில் பெல்' பளு தூக்கும் முயற்சிகள் மூலமாக கணக்கிடுவார்கள். அந்தவகையில்தான், நான் 'கெட்டில் பெல்' வகைகளில் பயிற்சி பெற்று, சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுகிறேன்.

* 'கெட்டில் பெல்' பளு தூக்கும் போட்டிகளில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

2019-ம் ஆண்டு வரை எனக்கும், பளு தூக்கும் போட்டிகளுக்கும், அதுசார்ந்த பயிற்சிகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 2019-ம் ஆண்டு இறுதியில், உடலை வலுப்படுத்தும் நோக்கில், உடற்பயிற்சி கூடத்திற்குள் நுழைந்தேன். அங்குதான், 'கெட்டில் பெல்' பளு தூக்குதல் பற்றி தெரிந்து கொண்டு, முயற்சி செய்தேன்.

* இதன் அடிப்படை என்ன?

பொதுவாக, பளு தூக்குதல் விளையாட்டில், குறிப்பிட்ட எடையை தலைக்கு மேல் தூக்கினாலே போதுமானதாக இருக்கும். ஆனால், 'கெட்டில் பெல்' விளையாட்டு அப்படி இருக்காது. குறிப்பிட்ட எடையை, தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட நிமிடங்கள் நிற்க வேண்டும். யாருடைய உடல் அதிக நேரம் தாக்குபிடிக்கிறதோ, அவர்களே வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த விளையாட்டில், 10 நிமிடம், 30 நிமிடம், 60 நிமிடம்... இப்படி பல பிரிவுகள் இருக்கின்றன.

* சாதாரண முயற்சி, சாதனை முயற்சிகளாக மாறியது எப்போது?

ஆரம்பத்தில், ஒருசில மாதங்கள் கொஞ்சம் விளையாட்டாக முயன்று பார்த்தேன். பிறகு, என்னுடைய திறனை சோதித்து பார்க்க போட்டிகளில் கலந்து கொண்டேன். 2020-ம் ஆண்டுகளில், கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், சில போட்டிகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்டேன்.

* இதுவரை எத்தனை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள்?

நிறைய போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இதில் கடந்த மே மாதம் நடந்த ஆசிய அளவிலான போட்டியும், சமீபத்தில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியும் மிக முக்கியமானது. இவ்விரு போட்டிகளிலும், தங்கம் வென்றிருக்கிறேன்.

* சிறப்பான வெற்றியாக எதை கருதுகிறீர்கள்?

சமீபத்தில் நடந்து முடிந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளைதான், மிக சிறந்ததாக கருதுகிறேன். ஏனெனில், இந்த சர்வதேச போட்டியில், 23 வயதிற்குட்பட்டோருக்கான 'டபுள் ஆர்ம் லாங் சைக்கிள்' பிரிவில், என்னுடன் 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டியிட்டனர். அதில் நான் 32 கிலோ எடையை (16 கிலோ எடை கொண்ட இரண்டு இரும்பு குண்டுகளை), இரு கைகளிலும் 10 நிமிடத்திற்கு தூக்கி, தாங்கி நின்று, வெற்றி பெற்றேன். சர்வதேச அளவில், தங்கமும் வென்றேன். அதேபோல, ஆசிய அளவில் நடத்தப்பட்ட ஐ.கே.ஓ. போட்டியில், 12 கிலோ எடையை தூக்கி, தாங்கி நின்று, தங்கம் வென்றேன்.

* யாரிடம் பயிற்சி பெறுகிறீர்கள்?

சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரன் என்பவரிடம் கடந்த 3 ஆண்டுகளாகத்தான் பயிற்சி பெறுகிறேன். அவரும், இந்த விளையாட்டில், பல்வேறு சாதனைகளை படைத்தவர். சர்வதேச அளவில், தங்கமும் வென்றிருக்கிறார். அவரிடம்தான், 'கெட்டில் பெல்' நுணுக்கங்களை கற்று வருகிறேன்.

* பளு தூக்கும் பயிற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைத்ததா?

ஆரம்பத்தில், கொஞ்சம் யோசித்தார்கள். பிறகு, எனது ஆர்வத்தையும், பதக்கம் வெல்வதையும் பார்த்துவிட்டு, இப்போது முழு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், பெற்றோர்களை தாண்டி, வெளியில் இருந்து சில விமர்சனங்களும், பளு தூக்கும் பயிற்சிகளை விட்டுவிட சொல்லி நிறைய அறிவுரைகளும் வந்து கொண்டேதான் இருக்கிறது. நான் அவற்றை பெரிதுபடுத்துவதில்லை. காது கொடுத்து கேட்பதில்லை.

* உங்களுடைய இலக்கு எது?

சர்வதேச அளவில், பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு, நிறைய தங்க பதக்கங்களை வெல்ல ஆசையாக இருக்கிறேன். அதற்கான பயிற்சிகளிலும் இறங்கி இருக்கிறேன்.

* பிரபலமில்லாத விளையாட்டு இது. தமிழ்நாட்டில் உங்கள் மூலமாக பிரபலமாகிறதா?

என்னுடைய பயிற்சியும், வெற்றியும் பல பெண்களுக்கு 'கெட்டில் பெல்' பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. என்னை ரோல் மாடலாக கொண்டு, நிறைய பெண்கள் பயிற்சி பெறுவதை நினைக்கையில், பெருமையாக உணர்கிறேன்.

* பயிற்சிகளின் போது காயம் ஏற்பட்டது உண்டா?

இது காயங்களை உண்டாக்கக்கூடிய விளையாட்டுதான். அதனால் மிகவும் கவனமாக பயிற்சி பெற வேண்டும். இல்லையேல், தோள்பட்டை, முதுகு, கைமணிகட்டு, கை விரல்கள் போன்றவற்றில் காயம் ஏற்பட்டுவிடும். இத்தகைய காயங்களை நானும் அடிக்கடி சந்தித்தது உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்