தேசம் கடந்த காதலின் அழியா நினைவு சின்னம் : தமிழகத்தில் ஒரு தாஜ்மகால்
160 ஆண்டுகள் கடந்தாலும், பராமரிப்பின்றி சில சிதைவுகள், சேதாரங்களை கண்டாலும் இன்றும் காதல் நினைவு சின்னமாக ராயக்கோட்டையில் ஒரு தெய்வீக காதலை சுமந்து நிற்கிறது இந்த நினைவு பொக்கிஷம். மதங்களை கடந்து மனங்களால் இணைந்த அமரக்காதலின் அழியா நினைவு சின்னமான இந்த மகால் ‘தமிழக தாஜ்மகால்’ என்றால் மிகையில்லை.;
தாஜ்மகால்-
இது உலக அதிசயம் மட்டுமல்ல...தெய்வீக காதலின் அழியா நினைவு சின்னம்! யமுனை நதிக்கரையோரம்... மும்தாஜின் மீது கொண்ட காதலால்... ஷாஜகான் கட்டிய உன்னத காதல் காவியம்தான் இந்த தாஜ்மகால்.
கவிதை எழுதிட அறியாதவர்களை கூட கற்பனை சிறகினை விரித்து கவி புனைய வைக்கும் ஆற்றல் உடையது மங்கையின் மான் விழிகள். இங்கே ஒருவர் காதலுக்காக கவிதை எழுதவில்லை. தமிழகத்தில் ஒரு தாஜ்மகாலையே எழுப்பி இருக்கிறார்.
இந்த அழியா காவியத்தை கட்டியவர் ஒரு ஆங்கிலேயர் என்றால் திகைப்பாகத்தான் இருக்கும். கல்லறையை கூட ரசிக்க வைப்பது காதலில் மட்டுமே சாத்தியம். தேசம், மொழி, மதம் கடந்த தனது காதல் மனைவியின் கல்லறையை சுற்றி ஒரு அழகிய மகாலை எழுப்பி இருக்கிறார் அந்த ஆங்கிலேயர். அவரது காதலி யார் தெரியுமா? ஒரு இஸ்லாமிய பெண்.
ராயக்கோட்டையில் குளோவர்
தர்மபுரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ராயக்கோட்டை. இங்குதான் இந்த அழகிய மகால் உள்ளது. இனி நமது மனக்கண்ணில் விரியப்போவது 160 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை காதல் கதை....
ராயக்கோட்டை பெயருக்கு ஏற்ப மலைகள், கோட்டைகள் சூழ்ந்த இந்த பகுதி ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் படை தளமாக விளங்கியது. இந்த பகுதியை திப்பு சுல்தான் ஆட்சி செய்தபோது அந்த பகுதியை பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினார்கள். அப்போது மதராஸ் ரெஜிமெண்டின் தலைவராக இருந்த மேஜர் ஜான் காம்பெல் குளோவரை ராயக்கோட்டையின் தலைவராக கடந்த 1846-ல் பிரிட்டிஷ் தலைமை நியமித்தது. அந்த நேரத்தில் ஹைதர்அலியின் படை வீரராக இருந்த ஜமாலுதீன் என்பவர் குளோவரின் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். ராயக்கோட்டையில் மலையின் மேல் குளோவரின் மாளிகை இருந்தது. அதன் அருகிலேயே ஜமாலுதீன் குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
கண்டதும் பூத்த காதல்
இஸ்லாமியரான ஜமாலுதீனுக்கு, மெகருன்னிஷா என்ற அழகிய மகள் இருந்தார். பருவ மங்ைகயான அவரை கண்டதும் கிறிஸ்தவரான குளோவருக்குள் காதல் தீ பற்றிக்கொண்டது. இருவரது கண்களும் கலந்தன. காதலும் மலர்ந்தது. அங்கே தேசம், மொழி, மதம் காணாமல் போயின. வழக்கம் போல இவர்களது காதலுக்கும் எதிர்ப்புகள் இருந்தன. குறிப்பாக மெகருன்னிஷா மதம் மாறி திருமணம் செய்வதை அவரது உறவினர்கள் ஏற்கவில்லை. ஆனாலும் மெகருன்னிஷா தனது காதலில் உறுதியாக இருந்தார்.
இதனால் தங்களது மனதை மாற்றிக் கொண்ட அவரது உறவினர்கள் குளோவருக்கும், மெகருன்னிஷாவுக்கும் ராயக்கோட்டை அரண்மனையில் திருமணம் செய்து வைத்தனர். தான் விரும்பியவரை மணம் முடித்தாலும் மெகருன்னிஷா அவரது இஸ்லாமிய மரபு படியே வாழ்ந்து வந்தார்.
கையை இழந்தார்; முகமும் சிதைந்தார்
இனி வாழ்வில் எல்லாமே இன்பமயம்தான் என சிறகடித்த இளம்ஜோடியின் இல்லற வாழ்க்கையில் இடியென விழுந்தது போர் அறிவிப்பு. ஆம், 1852-ல் நடந்த 2-ம் பர்மா போர் தான் அது.
இந்த போருக்கு தலைமை ஏற்க குளோவரை உடனே புறப்பட்டு வருமாறு பிரிட்டிஷ் தலைமை உத்தரவிட்டது. தனது காதல் மனையாள் மெகருன்னிஷாவை பிரிய மனமின்றி தவித்த குளோவர் ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு போர் முனைக்கு சென்றார். பயங்கர போரில் நடந்த பீரங்கி தாக்குதலில் குளோவர் படுகாயம் அடைந்தார். கை ஒன்றையும் இழந்தார். அழகிய முகமும் சிதைந்தது. இனி அவரால் போர் புரிய முடியாத நிலையில் ராயக்கோட்டைக்கு குளோவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
போர் முடிந்து தனது காதல் மனைவியுடன் இணைப்பிரியாது மகிழ்ச்சியாக வாழலாம் என எண்ணி இருந்த குளோவர் கலங்கி போனார். தனது அவல நிலையை மனைவி எப்படி தாங்கி கொள்வாள்? அவளது இதயம் வெடித்து போகுமே... என்று வெம்பினார்.
நீங்கா துயில் கொண்ட மனைவி
போரில் வெற்றி முரசு கொட்டி ஆசை கணவர் திரும்பி வருவார் என ஆர்வத்துடன் காத்திருந்த மெகருன்னிஷா... குற்றுயிரும், குலை உயிருமாக வந்த காதல் கணவரை கண்டு துடித்தார். கவலையால் கலங்கினார்...உடல் நலம் குன்றினார். தீரா நோயால் தேகம் மெலிந்தார். விரைவிலேயே மெகருன்னிஷா, காதல் கணவர் குளோவரை தவிக்க விட்டு நீங்கா துயில் கொண்டார். ஒருபுறம் போரில் உடல் உறுப்புகளை இழந்த பாதிப்பு, மற்றொரு புறம் தான் போராடி திருமணம் செய்த காதல் மனைவி உயிர் துறந்த நிகழ்வு இவை இரண்டாலும் துவண்டு போனார் குளோவர். இனி ராயக்கோட்டை படை தலைமை பொறுப்பை தன்னால் தொடர முடியாது. எனவே நான் இந்த பணியில் இருந்து விலகுகிறேன் என்று பிரிட்டிஷ் தலைமையிடம் வேண்டுகோள் வைத்தார். இதையடுத்து பிரிட்டிஷ் நிர்வாகம் அவருக்கு விருப்ப ஓய்வு அளித்தது. அதன் பிறகு தனது அதிகாரம், ஆளுமை அனைத்தையும் விடுத்து முற்றும் துறந்த முனிவரை போல ராயக்கோட்டை அருகே இருந்த தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதிக்கு சென்றார் குளோவர். அங்கு ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்து வந்தார்.
அழகிய மகால் எழுந்தது
ஆனாலும், மனைவி மெகருன்னிஷாவின் நினைவு அவரை வாட்டி வதைத்தது. தனது காதல் மனைவியின் கல்லறையில் நினைவு சின்னம் எழுப்ப நினைத்த அவர், வடஇந்தியாவில் இருந்து சிற்பிகளை ராயக்கோட்டைக்கு வரவழைத்தார். அங்கு மெகருன்னிஷாவை அடக்கம் செய்த இடத்தில் அவரது மத நம்பிக்கைகள் குறையாமல் அற்புதமான வேலைபாடுகளுடன், 2 மினார்களுடன் கூடிய ஒரு அழகிய மண்டபத்தை கட்டினார்.
அதன் அருகிலேயே ஒரு நினைவு சின்னத்தையும் உருவாக்கினார். தினமும் பஞ்சப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டைக்கு நடந்து வந்து அங்கு தனது மனைவியின் நினைவாக எழுப்பிய நினைவு மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து இருந்து செல்வதை குளோவர் வழக்கமாக கொண்டார். சில நாட்கள் கழித்து ராயக்கோட்டை அருகில் ஜக்கேரியில் ஒரு சிறிய வீடு கட்டி அதில் அவர் குடியேறினார். தனது காதல் மனைவியின் நினைவாக 20 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த குளோவர் முதுமை காரணமாக 1876-ம் ஆண்டு உயிர் இழந்தார்.
பிரிட்டிஷ் படையில் திறம்பட பணியாற்றிய குளோவரின் உடலை முழு அரசு மரியாதையுடன் ஓசூர் அருகே மத்திகிரியில் அடக்கம் செய்தது அன்றைய பிரிட்டிஷ் நிர்வாகம்.
தமிழக தாஜ்மகால்
போராடி காதலில் ஜெயித்து வாழ்பவர்கள் சில பேர். தான் விரும்பிய காதலன், காதலியுடன் சேர்ந்து வாழ வாழ்க்கை அமையாவிட்டாலும் அவர்களின் நினைவாக வாழ்பவர்கள் சில பேர். காதல் தோல்விகளை மனதில் சுமந்து வாழ்பவர்கள் சில பேர். இவர்களுக்கு மத்தியில் தனது காதல் மனைவி மறைந்த போதிலும், அவருக்கு நினைவு சின்னம் எழுப்பி, அவருக்காகவே கடைசி வரை வாழ்ந்து மறைந்தார் குளோவர். இவர்களது காதல் வியக்கத்தக்கது.
160 ஆண்டுகள் கடந்தாலும், பராமரிப்பின்றி சில சிதைவுகள், சேதாரங்களை கண்டாலும் இன்றும் காதல் நினைவு சின்னமாக ராயக்கோட்டையில் ஒரு தெய்வீக காதலை சுமந்து நிற்கிறது இந்த நினைவு பொக்கிஷம். மதங்களை கடந்து மனங்களால் இணைந்த அமரக்காதலின் அழியா நினைவு சின்னமான இந்த மகால் 'தமிழக தாஜ்மகால்' என்றால் மிகையில்லை.
விழியில் விழுந்து...இதயம் நுழைந்து...உயிரில் கலக்கும் காதலை, மகிழ்வுடன் பரிமாறிக்கொள்ளும் காதலர் திருநாளான, பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உண்மை காதலை போற்றுவோம். அமரக்காதலை வாழ்த்துவோம்.