ஆன்லைன் கல்வியில் சாதித்த பெண்

ஆஸ்திரேலியாவில் பார்த்து வந்த வேலையை துறந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் பள்ளியைத் தொடங்கிய பெண் ஒருவர், இன்று ஆண்டுக்கு கணிசமான வருவாய் ஈட்டுகிறார். அவரது பெயர் ஷைனி.

Update: 2022-07-12 14:56 GMT

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் விவசாய குடும்ப பின்னணியை கொண்டவர். 12-ம் வகுப்பு வரை கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்தார்.

அதன் பின்னர் கல்வி உதவித் தொகை பெற்று ஆஸ்திேரலியாவுக்கு சென்று, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அங்கேயே 4 ஆண்டுகள் விற்பனை பிரதிநிதியாகயும் பணியாற்றினார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அரசின் கல்வித் திட்டத்தில் சேர்ந்து இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்தி, ஆங்கிலத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தினார். நாடு முழுவதும் இருந்து ஷைனியின் ஆன்லைன் வகுப்பில் 8 லட்சம் பேர் சேர்ந்தனர். இன்றைக்கு அவருக்கு 40 லட்சம் ஆன்லைன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் பள்ளியின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வணிகம் செய்கிறார்.

இது குறித்து ஷைனி கூறுகையில், ''இன்றைக்கும் பெரும்பாலான கிராமப்புறங்களில் நல்ல கல்வி கிடைப்பதில்லை. சுற்றுவட்டாரங்களில் நல்ல ஆசிரியர் கிடையாது. டியூசன் படிக்க 35 கிலோ மீட்டர் தொலைவு வரை மாணவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. நானும் பள்ளியில் படிக்கும்போது இந்த சூழலில்தான் வளர்ந்தேன். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பிறகும் இங்கு நிலைமை மாறவில்லை. கல்வித்துறையில் இருக்கும் அனுபவத்தை இந்தக் குழந்தைகளுக்காக பயன் படுத்தினால் என்ன..? என்று தோன்றியது.

நானும் என் குழுவினரும் இணைந்து சில மாதங்கள் ஆய்வு செய்தோம். பல மாநிலங் களுக்குச் சென்றோம். அந்தந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும் சென்றோம். மாணவர்கள் படிப்பதற்காக சந்திக்கும் சிரமங்களை அவர்களது பெற்றோரிடம் கேட்டறிந்தோம்.

இதன் அடிப்படையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வித்யாகுல் என்ற பெயரில் இணையம் மற்றும் யூ-டியூப்பில் ஆன்லைன் பள்ளியைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கல்வித்துறையில் பணியாற்றுவோர் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஏராளமானோர் நிதியுதவி அளித்தனர். இன்றைக்கு சுயச்சார்புடன் மாறியுள்ளோம். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செயலியை தொடங்கினோம்.

நம் நாட்டில் ஏராளமானோர் ஆன்லைன் பள்ளி களை நடத்துகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தி பேசுவோர் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள உள்ளூர் மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளவர்களுக்கு சரியான ஆன்லைன் பள்ளிகள் இல்லை.

நம் நாட்டில் 70 சதவீத குழந்தைகள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். அதனால், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

தற்போது உத்தரப்பிரேதசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநில மொழிகளில் ஆன்லைன் பள்ளி நடத்து கிறோம். என்னுடன் தற்போது 100 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எங்களுடன் இணைந்துள்ளார்கள். மொபைல் ஆப் அல்லது கம்ப்யூட்டர் வழியே மாணவர்கள் ஆன்லைன் பள்ளியில் படிக்கலாம். வழக்கமான பள்ளிகளைப் போல், ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியர் இருப்பார்.

பணம் சம்பாதிப்பது என் நோக்கம் அல்ல. கிராமப்புற குழந்தைகள் சரியான கல்வியைப் பெற வேண்டும். கொரோனா காலத்தில் கிராமப்புற குழந்தைகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். பெரும்பாலானோருக்கு ஆங்கில வழி கல்வி பிரச்சினையாக உள்ளது. பல பாடங்களை இலவசமாக வழங்குகிறோம். கல்விக் கட்டணத்தையும் குறைவாகவே நிர்ணயித்துள்ளோம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்